டீக்கடை பெஞ்ச்: 'என்கவுன்டர்' இன்ஸ்பெக்டரால் ரவுடிகள் உதறல்!
டீக்கடை பெஞ்ச்: 'என்கவுன்டர்' இன்ஸ்பெக்டரால் ரவுடிகள் உதறல்!
ADDED : மார் 05, 2024 12:25 AM

''சீட்டுக்கு கடும் போட்டி ஏற்பட்டிருக்கு வே...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த தொகுதியிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''பா.ஜ., கூட்டணியில த.மா.கா., சேர்ந்துட்டுல்லா... திருநெல்வேலி, ஈரோடு, தஞ்சாவூர் ஆகிய மூணு தொகுதிகள்ல களமிறங்க, அந்த கட்சியினர் தயாராகிட்டு இருக்காவ வே...
''த.மா.கா., மாநில செயலரான எஸ்.டி.எஸ். சார்லஸ், நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால, அவருக்கு நெல்லை தொகுதியை தரணும்னு, அந்த மாவட்ட செயற்குழு கூட்டத்துல தீர்மானம் நிறைவேத்தியிருக்காவ...
''ஆனா, 'திருநெல்வேலி தொகுதியில பா.ஜ., தான் போட்டியிடும்'னு சொல்லிட்டு, அக்கட்சி நிர்வாகிகள் எல்லாம் கிராமங்கள்ல பிரசாரத்தை துவக்கிட்டாவ வே...
''இங்க, நயினார் நாகேந்திரன் அல்லது அவரது மகன் போட்டியிடுவார்னு சொல்லுதாவ... இதுக்கு நடுவுல, பா.ஜ., கூட்டணியில சேர்ந்து, திருநெல்வேலியில போட்டியிட சமத்துவ மக்கள் கட்சியின் சரத்குமாரும் விரும்புதாரு... அதனால, யாருக்கு தொகுதி, யாருக்கு 'அல்வா' கிடைக்கும்னு தெரியல வே...'' என்றார், அண்ணாச்சி.
''தேர்தல் சம்பந்தமா என்கிட்டயும் ஒரு தகவல் இருக்குது பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''நாமக்கல் லோக்சபா தொகுதியை இந்த முறையும், தி.மு.க., கூட்டணியில கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கே ஒதுக்கிட்டாங்களே... அந்த கட்சியின் வேட்பாளரும், வழக்கம்போல உதயசூரியன் சின்னத்துல போட்டியிட இருக்காரு பா...
''இப்ப எம்.பி.,யா இருக்கிற சின்ராஜ், தனக்கு சீட் வேண்டாம்னு சொல்லிட்டதால, அந்த கட்சியின் மாவட்டச் செயலர் மாதேஸ்வரன், மாநில நிர்வாகி சூரியமூர்த்தி ஆகியோர்ல ஒருத்தர் களம் இறங்குவாங்கன்னு தெரியுது...
அ.தி.மு.க.,வுல, ப.வேலுாரைச் சேர்ந்த, மாவட்ட வர்த்தக அணி செயலர் தமிழ்மணி போட்டியிடுவார்னு சொல்றாங்க பா...
''இவங்க எல்லாமே, தேர்தல் களத்துக்கு புதுசு... அதே நேரம், பா.ஜ., சார்புல மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் போட்டியிடுவார்னு சொல்றாங்க பா...
''இவர் ஏற்கனவே எம்.எல்.ஏ., - எம்.பி., யா இருந்தார்... தி.மு.க., - அ.தி.மு.க.,ன்னு ரெண்டு கட்சிகள்லயும், பல தேர்தல் களங்களை பார்த்தவருங்கிறதால, 'நாமக்கல் தொகுதியை இந்த முறை நாங்க பிடிச்சிடுவோம்'னு பா.ஜ.,வினர் உற்சாகத்துல இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''என்கவுன்டர் இன்ஸ்பெக்டரால, ரவுடிகள் எல்லாம் நடுங்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''எந்த ஊருல பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''பெரம்பலுார் டவுன்ல கொலை, வழிப்பறி, கட்டப்பஞ்சாயத்து, ஆள் கடத்தல்னு ரவுடிகள் அட்டகாசம் நாளுக்கு நாள் ஜாஸ்தியாயிண்டே போறது... பொதுமக்கள் பீதியோட தான் வெளியில போயிட்டு வரா ஓய்...
''இதனால, பெரம்பலுார் டவுன் இன்ஸ்பெக்டரா கருணாகரன் என்பவரை சமீபத்துல, உயர் அதிகாரிகள், 'டிரான்ஸ்பர்' போட்டு அனுப்பியிருக்கா... திருச்சியில பிரபல ரவுடியா வலம் வந்த ஜெகதீசனை, போன வருஷம் என்கவுன்டர்ல போட்டு தள்ளியவர் தான் இந்த கருணாகரன்...
''பெரம்பலுார்லயும் அட்டகாசம் பண்ணிண்டு இருக்கற ரவுடிகள் கொட்டத்தை அடக்க இவர் தான் சரியான ஆள்னு அனுப்பியிருக்கா... இதனால, ரவுடிகள் உதறல்ல தான் இருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது.

