ADDED : அக் 08, 2024 07:08 AM

சென்னை: 'கத்தியை எடுத்து, கொலை வழக்கில் சிக்கினால் என்கவுன்டர்தான்' என, வீடு தேடிச் சென்று ரவுடியின் மனைவியை எச்சரித்த உதவி கமிஷனர், மாநில மனித உரிமை கமிஷனில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின், ரவுடிகளின் வீடுகளுக்கு சென்று, போலீசார் எச்சரித்து வருகின்றனர். திருவொற்றியூரில் உள்ள ரவுடி ஒருவரின் வீட்டிற்கு, ஜூலை மாதம் போலீசாருடன், உதவி கமிஷனர் இளங்கோவன் சென்றார்.
ரவுடியின் மனைவியிடம், 'உங்கள் கணவர் ஏதேனும் குற்றத்தில் ஈடுபட்டால், என்னிடமோ, இன்ஸ்பெக்டர் மற்றும் தனிப்படை போலீசாரிடமோ தகவல் தெரிவிக்க வேண்டும். நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு, நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.
ஏதேனும் குற்றங்களில் ஈடுபட்டால், கை, கால்கள் உடைக்கப்படும். கத்தியை எடுத்து கொலை வழக்கில் சிக்கினால், என்கவுன்டர் தான்' என, எச்சரிக்கை விடுத்தார்.
இது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, உதவி கமிஷனரின் என்கவுன்டரின் பேச்சு குறித்து, மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகிறது.
ஆணையத்தில் நேற்று, உதவி கமிஷனர் இளங்கோவன் ஆஜராகி, ''என் பேச்சில் எவ்வித உள்நோக்கமும் இல்லை. குற்றம் நடந்துவிடக்கூடாது என்பதற்காகவே முன்னெச்சரிக்கை செய்தேன்,'' என, விளக்கம் அளித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக, வரும் 14ம் தேதி, ஆணையத்தில் ஆஜராக வேண்டும் என, சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு, சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.