சிரியாவில் ஆசாத் குடும்ப ஆட்சிக்கு முடிவு; உலக தலைவர்கள் சொல்வது என்ன?
சிரியாவில் ஆசாத் குடும்ப ஆட்சிக்கு முடிவு; உலக தலைவர்கள் சொல்வது என்ன?
ADDED : டிச 09, 2024 08:43 AM

டமாஸ்கஸ்: சிரியாவில் அதிபர் ஆசாத் ஆட்சி வீழ்ச்சி அடைந்தது பற்றி அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வரலாற்று நாள்
இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் இரண்டு தசாப்த கால ஆட்சி வீழ்ச்சியடைந்ததை பாராட்டுகிறேன். இது மத்திய கிழக்கிற்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். ஆசாத்தின் ஆட்சியில் டமாஸ்கஸ் நகரில் நடந்து வந்து கொடுங்கோன்மை முடிவுக்கு வந்தது.
அதே நேரத்தில் குறிப்பிடத்தக்க ஆபத்துகள் உள்ளது. நாங்கள் அமைதியை விரும்புகிறோம். சிரியாவில் பல்வேறு நகரங்களை கைப்பற்றி உள்ள கிளர்ச்சியாளர்கள் படை அண்டை நாடுகளுடன் அமைதியான நல்ல உறவை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அடக்குமுறை
இது குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாவது: ஆசாத்தின் சர்வாதிகார ஆட்சியின் வீழ்ச்சி, பல தசாப்த கால மிருகத்தனமான அடக்குமுறையை முடிவுக் கொண்டு வருகிறது. சிரியாவிற்கான புதிய அத்தியாயம் துவங்கி உள்ளது. மக்களுக்கு துன்பம் இல்லாத சூழல் உருவாகி உள்ளது. சிரியாவில் நடக்கும் மாற்றத்தை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்கா ஆதரவு
அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் கூறியதாவது: அமெரிக்கா தனது பங்காளிகள் மற்றும் சிரியாவில் உள்ள பங்குதாரர்களுடன் இணைந்து உதவி செய்யும். பல ஆண்டுகளாக ஆசாத்துக்கு ஆதரவு அளித்து வந்த ஈரான், ஹிஸ்புல்லா மற்றும் ரஷ்யா கை விட்டது. வளமான எதிர்காலத்தை சிரியா மக்கள் உருவாக்க இதுவே சரியான நேரம்.
சிரியாவில் அமைதி திரும்ப கூட்டாளிகளுடன் அமெரிக்கா பணியாற்றும். கடந்த நான்கு ஆண்டுகளில், எனது நிர்வாகம் சிரியா தொடர்பாக தெளிவான கொள்கையை பின்பற்றியது. ஜோர்டான், லெபனான், ஈராக் மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட சிரியாவின் அண்டை நாடுகளுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.