முடிந்தது காற்றாலை சீசன் காப்பாற்றுது மத்திய மின்சாரம்
முடிந்தது காற்றாலை சீசன் காப்பாற்றுது மத்திய மின்சாரம்
ADDED : அக் 02, 2024 01:08 AM
சென்னை:மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு நீண்ட நாட்களுக்குப் பின், 5,500 மெகாவாட் வரை மின்சாரம் கிடைக்கிறது. காற்றாலைகளில் இருந்து கிடைக்கும் மின்சாரம் குறைந்துள்ள நிலையில், தமிழக மின்தேவையை பூர்த்தி செய்ய, மத்திய மின்சாரம் கை கொடுக்கிறது.
தமிழக மின்தேவையை பூர்த்தி செய்ய, மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது.
தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள மத்திய அரசின் தேசிய அனல்மின் கழகம், நெய்வேலி நிலக்கரி நிறுவனம், இந்திய அணுமின் கழகம் ஆகிய மின் நிலையங்களில் இருந்து தமிழகத்திற்கு தினமும், 7,100 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், முழுமையாக வழங்கப்படாமல், 5,500 மெகாவாட் வரை கிடைக்கிறது.
தமிழகத்தில், கடந்த மே மாதம் காற்றாலை சீசன் துவங்கியது. காற்றாலைகளில் இருந்து தினமும், 3,000 மெகாவாட்டிற்கு மேல் மின்சாரம் கிடைத்ததால், மத்திய மின் நிலையங்களில் உள்ள சில அலகுகளில் பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இதனால், மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு கடந்த வாரம் வரை, 4,700 மெகாவாட் வரை தான் வழங்கப்பட்டது. கடந்த மாதத்துடன் காற்றாலை சீசன் முடிவடைந்ததால், சில தினங்களாக காற்றாலைகளில், 1,000 மெகாவாட் கூட கிடைக்கவில்லை.
இதனால், மின்தேவையை பூர்த்தி செய்ய, மின்வாரியத்திற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பின், நேற்று மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு, 5,450 மெகாவாட் கிடைத்தது. இது, வரும் நாட்களில் தொடரும் என்பதால், மின் தேவையை பூர்த்தி செய்வதில், வாரியத்திற்கு சிரமம் குறைந்துள்ளது.