முடிகிறது காற்றாலை சீசன் மின் வாரியத்திற்கு நெருக்கடி
முடிகிறது காற்றாலை சீசன் மின் வாரியத்திற்கு நெருக்கடி
ADDED : செப் 27, 2024 11:16 PM
சென்னை:காற்றாலை சீசன் இம்மாதத்துடன் முடிய உள்ள நிலையில், மின் தேவையை பூர்த்தி செய்வதில், மின் வாரியத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, 9,150 மெகாவாட் திறனில் காற்றாலை மின் நிலையங்கள் உள்ளன. இவற்றை தனியார் நிறுவனங்கள் சொந்த மின் பயன்பாட்டிற்கும், மின் வாரியத்திற்கு மின்சாரத்தை விற்கவும் அமைத்து உள்ளன.
மே முதல் செப்டம்பர் வரை காற்றாலை சீசன். நடப்பு சீசனில், காற்றாலை மின் நிலையங்களில் இருந்து தினமும் சராசரியாக, 3,000 - 4,500 மெகாவாட் வரை மின்சாரம் கிடைத்தது. இருப்பினும், புதிய உச்சத்தை எட்டவில்லை.
எப்போதும் இல்லாத வகையில் இந்தாண்டு செப்டம்பரிலும் வெயில் சுட்டெரித்தது. இதனால், மின் தேவை அதிகரித்தபடி இருந்தது.
இன்னும் சில தினங்களில் காற்றாலை சீசன் முடிகிறது. எனவே, மின் தேவையை பூர்த்தி செய்வதில், மின் வாரியத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, காற்றாலைகளை அதிகம் அமைத்து உள்ள, தமிழக நுாற்பாலைகள் சங்க முதன்மை ஆலோசகர் கே.வெங்கடாசலம் கூறியதாவது:
கடந்த, 2023 காற்றாலை சீசனுடன் ஒப்பிடும் போது, இந்தாண்டு சீசனில் காற்றின் வேகம் பெருமளவு குறைந்து காணப்பட்டது.
அதனால், காற்றாலை மின் நிலையங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரமும் குறைந்தது. அதேசமயம், இந்தாண்டில் வெயில் அதிகம் இருந்ததால், சூரியசக்தி மின் உற்பத்தி அதிகரித்து உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'காற்றாலை மின்சாரம் அதிகம் கிடைத்ததால், அனல் மின் உற்பத்தி குறைக்கப்பட்டது; இது, வரும் நாட்களில் அதிகரிக்கப்படும்; மழை சீசனும் துவங்க உள்ளதால், மின்தேவை பூர்த்தி செய்வதில் சிரமம் இருக்காது' என்றார்.