ஐகோர்ட் உத்தரவில் திருத்தம் கோரிய அமலாக்கத்துறையின் மனு தள்ளுபடி
ஐகோர்ட் உத்தரவில் திருத்தம் கோரிய அமலாக்கத்துறையின் மனு தள்ளுபடி
ADDED : நவ 18, 2025 06:57 AM

டாஸ்மாக் விவகாரத்தில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்ற உத்தரவில் திருத்தம் கோரி, அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
தமிழக அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் நிறுவனத்தில், 1,000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரை தொடர்ந்து, சென்னை, விழுப்புரம் உட்பட, 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள், கடந்த மார்ச்சில் சோதனை நடத்தினர்.
டாஸ்மாக் நிர்வாக இயக்குநர், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் ரித்தீஷ் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும், மே மாதம் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை அவரிடம் திருப்பி ஒப்படைக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டது. அத்துடன், அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்தது.
இதன் பின்னும், ஆகாஷ் பாஸ்கரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதனால், ஆகாஷ் பாஸ்கரன் சார்பில், அமலாக்கத்துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 'அமலாக்கத்துறை மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது' என, இடைக்கால தடை விதித்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது. இந்த மனு தள்ளுபடியானது.
இதையடுத்து, ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்ற, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவில் திருத்தம் கோரி, அமலாக்கத்துறை மற்றொரு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவையும் உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
-டில்லி சிறப்பு நிருபர் -

