ADDED : டிச 07, 2024 02:29 AM

சென்னை : புதுக்கோட்டை மாவட்டத்தில், எட்டு ஊராட்சி ஒன்றியங்களுக்கு சோலார் விளக்குகள் வாங்கியதில், 3.72 கோடி ரூபாய் மோசடி நடந்தது தொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகளும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
அ.தி.மு.க., ஆட்சியில், புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை, அறந்தாங்கி, அரிமளம், கறம்பக்குடி, திருமயம், மணமேல்குடி, குன்னாண்டார்கோவில், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு, சோலார் விளக்குகள் கொள்முதல் செய்ததில், 3.72 கோடி ரூபாய் மோசடி நடந்துஉள்ளது.
இதுகுறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து, பி.டி.ஓ.,க்கள் எனப்படும், எட்டு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அ.தி.மு.க., நிர்வாகி பழனிவேல் உட்பட, 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த மோசடியில் சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்து இருப்பது பற்றி, அமலாக்கத்துறை அதிகாரிகளும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள், லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்துள்ள வழக்கு ஆவணங்களை பெற்றுள்ளனர்.
அதன் அடிப்படையில், ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களுக்கும், எத்தனை சோலார் விளக்குகள் வாங்கப்பட்டன.
அதன் விலை மற்றும் மோசடி நடந்த விதம், சட்ட விரோத பண பரிமாற்றம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இதுதொடர்பாக, பி.டி.ஓ.,க்கள் மற்றும் அ.தி.மு.க., நிர்வாகி உட்பட, 11 பேருக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்க உள்ளனர்.