கலைஞர் "டிவி' சொத்து பறிமுதல் : அமலாக்கத்துறை தீவிரம்
கலைஞர் "டிவி' சொத்து பறிமுதல் : அமலாக்கத்துறை தீவிரம்
UPDATED : ஆக 24, 2011 12:54 AM
ADDED : ஆக 23, 2011 11:25 PM

புதுடில்லி: ஸ்பெக்ட்ரம் ஊழலில், கலைஞர் 'டிவி'யுடன் நடந்த பணப் பரிமாற்றத்தில் சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு, அமலாக்கத் துறை விரைவில் நடவடிக்கை எடுக்க உள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியும் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் சலுகை பெற்ற, டி.பி.ரியாலிட்டி நிறுவனத்தின் உரிமையாளரான ஷாகித் பல்வாவும் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்றதற்கு கைமாறாக, டி.பி.ரியாலிட்டி நிறுவனத்திடம் இருந்து சினியுக் நிறுவனம், குசிகான் பழ நிறுவனம் வழியாக, கலைஞர் 'டிவி' க்கு 214 கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் நடந்துள்ளது. இது தொடர்பாக, விசாரணை நடத்திய சி.பி.ஐ., கலைஞர் 'டிவி' நிறுவனத்தில் சோதனை நடத்தியது.
வரி ஏய்ப்பு செய்து, சட்ட விரோத பண மாற்றம் செய்யும் நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ், டி.பி.,ரியாலிட்டி நிறுவனம் முதல், கலைஞர் 'டிவி' வரையில் நடந்த பண பரிமாற்றத்தில் தொடர்புடைய நபர்கள் மற்றும் நிறுவனங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய, அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. விரைவில், இது தொடர்பான உத்தரவை, அமலாக்கத்துறை பிறப்பிக்க உள்ளது. இதையடுத்து, டி.பி.ரியாலிட்டி, சினியுக், குசிகான், கலைஞர் 'டிவி', சொத்துக்களை பறிமுதல் செய்ய, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என, அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.