டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் கண்டுபிடிப்பு: அமலாக்கத்துறை
டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் கண்டுபிடிப்பு: அமலாக்கத்துறை
UPDATED : மார் 13, 2025 11:46 PM
ADDED : மார் 13, 2025 07:14 PM

சென்னை: டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த சோதனையில் ஆயிரம் கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என அமலாக்கத்துறை கூறியுள்ளது.
சோதனை
தமிழகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கட்டுப்பாட்டில் உள்ள டாஸ்மாக் நிறுவனமானது, மது ஆலைகளில் இருந்து மதுபானங்களை கொள்முதல் செய்து, மாநிலம் முழுதும் உள்ள, 4,830 சில்லரை மதுக்கடைகளுக்கு வினியோகம் செய்கிறது.
தினமும் சராசரியாக, 150 கோடி ரூபாய்க்கு மேலாக மது பானங்கள் விற்பனையாகின்றன. டாஸ்மாக் சார்பில், ஏழு ஆலைகளில் இருந்து பீர், 11 ஆலைகளில் இருந்து மற்ற மதுபானங்கள் கொள்முதலாகின்றன. இந்த மது ஆலைகளை, தி.மு.க., முக்கிய புள்ளிகளும், அவர்களுக்கு வேண்டியவர்களுமே நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மதுபானங்கள் கொள்முதல் மற்றும் விற்பனையில், பெரிய அளவில் முறைகேடுகள் நடப்பதாகவும், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடப்பதாகவும், மத்திய அரசின் அமலாக்கத்துறைக்கு புகார்கள் சென்றன.
அதனால், கடந்த 6 ம் தேதி டாஸ்மாக் நிறுவனம் மது கொள்முதல் செய்யும் ஆலைகள், மது விற்பனை நிறுவனங்கள், டாஸ்மாக் தலைமை அலுவலகம், டாஸ்மாக் முன்னாள் அதிகாரிகளின் வீடுகள் என, 25க்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
சோதனை நடந்த இடங்கள்
சென்னை பாண்டிபஜார், திலக் தெருவில் உள்ள, தி.மு.க., பிரமுகர் ஒருவருக்கு சொந்தமானதாக கூறப்படும், 'அக்கார்டு டிஸ்லரிஸ் அண்டு பிரிவரீஸ்' மது ஆலை அலுவலகம்.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தி.மு.க., மேலிடத்திற்கு மிகவும் வேண்டியவர் என்று கூறப்படும் எஸ்.என்.ஜெயமுருகனின் எஸ்.என்.ஜே., மதுபான குழுமத்தின் தலைமை அலுவலகம்.
தி.மு.க.,வை சேர்ந்த மிக முக்கிய புள்ளி ஒருவரின் நெருங்கிய நண்பர் வாசுதேவனின் கால்ஸ் குழுமத்தின் சென்னை தி.நகரில் உள்ள தலைமை அலுவலகம்.
சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம்.
எம்.ஜி.எம்., என்ற மதுபான ஆலை மற்றும் அதன் தலைமை அலுவலகத்திலும் சோதனை நடந்துள்ளது. இந்த சோதனையின் போது முக்கியமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
முறைகேடு
இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: டாஸ்மாக் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில், பணியிட மாற்றம், போக்குவரத்து டெண்டர், பார் லைசென்ஸ் டெண்டர் ஆகியன சில மதுபான நிறுவனங்களுக்குச் சாதகமாக வழங்கப்பட்டது.
டாஸ்மாக் அதிகாரிகள் உதவியுடன் பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது தொடர்பான தரவுகள், அதில் டாஸ்மாக் அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதற்கு உண்டான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
ரூ.100 கோடி
டாஸ்மாக்கின் போக்குவரத்து டெண்டர் ஒதுக்கீடுகளில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.விண்ணப்பதாரர்களின் கேஒய்சி விவரங்கள் மற்றும் அவர்கள் அளித்த டிடி விவரங்கள் சரியாக பொருந்தவில்லை. இதற்கான இறுதி ஏலத்தில் ஒரே ஒரு விண்ணப்பதாரர் மட்டுமே இருந்தபோதிலும் அவருக்கே டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.
போக்குவரத்திற்காக டாஸ்மாக் ஆண்டுதோறும் ரூ.100 கோடிக்கு மேல் செலவு செய்கிறது.
டாஸ்மாக் பார் லைசென்ஸ் டெண்டர்கள் ஒதுக்கியதிலும் முறைகேடு நடந்ததற்கான ஆதாரம் கிடைத்து உள்ளது.ஜிஎஸ்டி, பான் எண் இல்லாதவர்களுக்கும், முறையான கேஒய்சி ஆவணங்கள் இல்லாத விண்ணப்பதாரர்களுக்கும் டெண்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
நேரடி தொடர்பு
ஒப்பந்தத்தை பெறுவது தொடர்பாக மதுபான நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் டாஸ்மாக் உயர் அதிகாரிகளுக்கும் இடையே நேரடி தொடர்பு இருந்ததற்கான ஆதாரங்ளை இந்த சோதனையின்போது கிடைத்துள்ள ஆவணங்கள் உறுதி செய்கின்றன.
எஸ்என்ஜெ, கல்ஸ், அக்கார்ட், SAIFL மற்றும் சிவா ஆகிய மதுபான நிறுவனங்களும், தேவி பாட்டில்ஸ், கிரிஸ்டல் பாட்டில்ஸ் மற்றும் ஜிஎல்ஆர் ஹோல்டிங் ஆகிய பாட்டில் நிறுவனங்கள் அதிகளவு நிதி மோசடியில் ஈடுபட்டு உள்ளதையும், சட்டவிரோத கட்டணங்கள், கணக்கில் வராத வகையில் நிதி பரிமாற்றம் நடந்ததும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.இதன் மூலம், அரசு கணக்கில் சேராமல் ரூ.1,000 கோடி ரூபாய் அபகரிக்கப்பட்டுள்ளது.
கூட்டு
திட்டமிட்டு செலவுகளை அதிகப்படுத்தியும், விற்பனை சார்ந்த புள்ளிவிவரங்களை உயர்த்தியும் இந்த முறைகேடுகள் நடைபெற்று உள்ளன. இந்த மோசடியில் பாட்டில் நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. நிதி ஆவணங்கள் மற்றும் திட்டமிட்ட வரி ஏய்ப்பு மூலம் மதுபான நிறுவனங்களும், பாட்டில் நிறுவனங்களும் கூட்டு சேர்ந்து பணியாற்றி உள்ளன. மதுபான தயாரிப்பு நிறுவனங்கள், மற்றும் பிற முக்கிய கூட்டாளிகளின் பங்கு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
பா.ஜ. போராட்டம்
இது தொடர்பாக தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: டாஸ்மாக், மதுபான அமைச்சர் மற்றும் தமிழகத்தில் மதுபான விநியோக நிறுவனங்கள் ஆகியவற்றில் நடந்த அமலாக்கத் துறை சோதனையில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முதல்வர் ஸ்டாலின் அச்சங்களைப் பரப்பி வருகிறார்.
கணக்கில் வராத ரூ.1000 கோடி பணம் லஞ்சமாக வழங்கப்பட்டது தொடர்பான மதுபான ஆலைகளிலிருந்து ஆவணங்களை அமலாக்கத் துறை கண்டுபிடித்துள்ளது.
மோசடி செய்வதன் மூலம் தங்கள் கட்சியின் கஜானாவை நிரப்புவதற்காக பொது மக்களை தி.மு.க. ஏமாற்றி வருகிறது, மேலும் இந்த லஞ்சத்தைப் பெற்ற மக்களுக்கு பதிலளிக்க வேண்டிய முதல்வர் கடமைப்பட்டுள்ளார்.
தமிழக முதல்வராகத் தொடர தனக்கு தார்மீக உரிமை இருக்கிறதா என்றும் அவர் தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டும்.
இது தொடர்பாக, பா.ஜ.மார்ச் 17 அன்று சென்னை எழும்பூரில் உள்ள தாளமுத்து நடராஜன் மல்லிகையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்திற்கு வெளியே ஒரு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த ஊழல் நிறைந்த திமுக அரசுக்கு எதிரான போராட்டத்தில் தமிழக மக்கள் பெருமளவில் எங்களுடன் இணையுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.