ADDED : ஆக 07, 2025 03:07 AM
சென்னை:சென்னையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில், இயந்திர கோளாறு ஏற்பட்டதால், பயணியர் அவதி அடைந்தனர்.
சென்னையில் இருந்து திருச்சிக்கு செல்லும் 'இண்டிகோ' விமானம், நேற்று அதிகாலை 5:45 மணிக்கு புறப்பட தயாரானது. இந்த விமானத்தில் 73 பயணியர் இருந்தனர். விமானம் ஓடுபாதையில் ஓடத்துவங்கியபோது, திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானி, அவசரமாக விமானத்தை நிறுத்தினார்.
சென்னை விமான நிலைய தகவல் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. விமான பொறியாளர்கள் பழுதை சரிசெய்த பின், ஒரு மணி நேரம் தாமதமாக காலை 6:45 மணிக்கு விமானம் புறப்பட்டது.
இண்டிகோ விமானம் புறப்படும்போது கோளாறு ஏற்பட்டதால், பயணியர், ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். அடிக்கடி, இது போன்று நடக்கும் சம்பவங்களுக்கு, மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.