ADDED : ஜன 22, 2025 02:24 AM
சென்னை:தமிழகத்தில் உள்ள, 11 அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகளில் பணியாற்றும் தொழில்நுட்ப பிரிவு அலுவலர்கள், தங்கள், 10 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததை கண்டித்து, நேற்று முன்தினம் முதல் ஜன., 24ம் தேதி வரை, கருப்பு பட்டை அணிந்து பணி செய்ய உள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு பொறியியல் கல்லுாரி தொழில்நுட்ப அலுவலர் சங்க மாநில தலைவர் கார்த்திகேயன்கூறியதாவது:
அலுவலர்களின் பதவி மறு சீரமைப்புக்கான அரசாணை 338, கடந்த 14 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. கல்லுாரிகளில் இருக்க வேண்டிய ஊழியர்களின் எண்ணிக்கையில், மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் மட்டுமே உள்ளதால், பணிச்சுமை அதிகரித்துள்ளது. தொழில்நுட்ப பணியாளர்களின் பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு நடத்தப்படவில்லை.
கல்வித்தகுதி, ஊதியம், உள்ளிட்டவற்றில் ஏ.ஐ.சி.டி.இ., விதிகளை பின்பற்ற வேண்டும் என்பது உட்பட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழில்நுட்ப கல்வி கமிஷனரிடம் ஏழு முறை மனுகொடுத்துள்ளோம்.
இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. இதை கண்டித்து, திங்கள் முதல் வெள்ளி வரை அனைத்து அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகளில், கருப்பு பட்டை அணிந்து பணிசெய்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

