டிஜிட்டல் முறையில் உயர்நீதிமன்ற தகவல் அதிகாரிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்க : உயர்நீதிமன்றம் உத்தரவு
டிஜிட்டல் முறையில் உயர்நீதிமன்ற தகவல் அதிகாரிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்க : உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : நவ 19, 2025 08:03 AM

மதுரை: உயர்நீதிமன்றத்திலிருந்து பகிரப்படும் தகவல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அத்துறையின் வழக்கறிஞர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
ஒரு வழக்கின் விசாரணையை முடித்து கீழமை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிடக்கோரி சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு : அரசு தரப்பு 'விசாரணை முடிந்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது,' என தெரிவித்தது. இதனால் இனி இவ்வழக்கில் இதற்கு மேல் உத்தரவிட எதுவும் இல்லை. வழக்கு பைசல் செய்யப்படுகிறது.
சிவில், கிரிமினல், ரிட் மற்றும் பொது நலன் சார்ந்த உட்பட அனைத்து வகை வழக்குகளையும் கண்காணித்து ஒருங்கிணைக்க, டிஜிட்டல் கண்காணிப்பு அமைப்பு ( சி.சி.எம்.எஸ்.,) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்ததும், விபரங்களை பதிவுத்துறை சி.சி.எம்.எஸ்., போர்ட்டலில் பதிவேற்றுகிறது.
அவற்றை சர்வருடன் ஒருங்கிணைக்கும் பணியை பதிவுத்துறை மேற்கொண்டுள்ளது. அரசுத்துறைகளின் கீழ்நிலை அலுவலகங்களை தொடர்பு கொள்ள தனிப்பட்ட அடையாளத்தை (ஐ.டி.,) உருவாக்க அரசு முயற்சி மேற்கொண்டுள்ளதாக அதன் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இம்முயற்சி பாராட்டத்தக்கது.
அறிவுறுத்தல் வழங்குவதற்காக அதிகாரிகள் நாள் முழுவதும் நீதிமன்றத்தில் காத்திருக்கும்போது, அவர்களின் நேரம் வீணாகிறது. துறையின் தொடர்பு அலுவலர்கள் மூலம் மின்னணு முறையில் அறிவுறுத்தல்களை பரிமாறிக்கொள்ள வேண்டும். சி.சி.எம்.எஸ்., உயர்நீதிமன்றம், அரசுக்கு இடையிலான முக்கியமான டிஜிட்டல் இணைப்பு பாலம். இது தாமதத்தை தவிர்த்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உடனடியாக தகவல் பெறுவதை உறுதி செய்கிறது. தற்போது ஆரம்ப கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் நடவடிக்கை எடுக்க கீழ்க்கண்ட வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். டிஜிட்டல்மயமாக்கப்பட்ட தகவல்கள் சி.சி.எம்.எஸ்., சர்வருக்கு தொடர்ந்து அனுப்பப்படும். இதன் மூலம், அரசுத்துறை சார்ந்த வழக்குகளையும் உரிய நேரத்தில் கண்காணிக்க முடியும்.
சி.சி.எம்.எஸ்., மூலம் உயர்நீதிமன்றத்திலிருந்து பகிரப்படும் தகவல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கீழ்நிலை அலுவலர்கள் மற்றும் அத்துறையின் வழக்கறிஞர்களுக்கு கிடைப்பதை பொதுத்துறை, உள்துறை, தகவல் தொழில்நுட்பத்துறைகளின் செயலர்கள் உறுதி செய்ய வேண்டும். இதை அனைத்து அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு விரிவாக்க வேண்டும்.
இதனால் நிர்வாகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் இத்தளத்தை பயன்படுத்த முடியும். உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும். இடையூறின்றி செயல்படுவதை உறுதி செய்வதற்காக, இக்குழு மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படும். இவ்வாறு உத்தரவிட்டார்.

