உலக ஹிந்து பொருளாதார மன்றம் சார்பில் தொழில் முனைவு ஒருங்கிணைப்பு மையம் துவக்கம்
உலக ஹிந்து பொருளாதார மன்றம் சார்பில் தொழில் முனைவு ஒருங்கிணைப்பு மையம் துவக்கம்
ADDED : அக் 27, 2024 12:00 AM

சென்னை:உலக ஹிந்து பொருளா தார மன்றம் சார்பில், தொழில் முனைவு ஒருங்கிணைப்பு மையங்களின் துவக்க விழா மற்றும் கருத்தரங்கம், சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் நேற்று நடந்தது.
உலக ஹிந்து பொருளாதார மன்றத்தின் நிறுவனர் சுவாமி விக்னானந்த் ஜி, கருத்தரங்கை துவக்கி வைத்து, 10 இடங்களில் துவக்கப்பட்டுள்ள தொழில் முனைவு ஒருங்கிணைப்பு மையங்களின் பொறுப்பாளர்களுக்கு, நினைவு பரிசு, கையேடு வழங்கி கவுரவித்தார்.
வேலைவாய்ப்பு
கருத்தரங்கில், 'மத்திய அரசின், ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ், எம்.எஸ்.எம்.இ.,யின் வளர்ச்சி' என்ற தலைப்பில், காந்தி கிராம பல்கலை துணைவேந்தர் பஞ்சநாதன் நடராஜன், ஐ.ஐ.டி., முன்னாள் மாணவர் டேவ்ஜெயசெல்வன், பேராசிரியர் சுதர்சன் ஆகியோர் பேசினர்.
தொடர்ந்து, 'இந்தியாவில் மருத்துவம் மற்றும் சுகாதார பொறியியல் துறையில் உற்பத்தி தொழில்களுக்கான வாய்ப்புகள் மற்றும் சவால்கள்' என்ற தலைப்பில், மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை பேராசிரியர் கிருஷ்ணகுமார் மற்றும் காவேரி மருத்துவமனை செயல் தலைவர் சந்திரகுமார் பேசினர்.
மேலும், கோவில் பொருளாதாரத்தை பாதுகாப்பது, விவசாயிகள், சிறுவணிகர்களை ஆதரிப்பது குறித்தும், கர்நாடகா ஹிந்து பொருளாதார மன்றத்தின் வளர்ச்சி, திட்டங்கள் குறித்தும், கருத்தாளர்களான சிவபிரசாத், சந்தீப்சிங், அருண் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேசினர்.
தொடர்ந்து, ஹிந்து வணிக நிறுவனங்களில் உள்ள காலி பணியிடங்கள் பட்டியல், ஹிந்து மாணவர்கள், பெரியவர்களுக்கான வேலைவாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், தொழிலதிபர்களான விவேக் சர்மா, ராஜிவ், வேணுகோபால், பேராசிரியர் சத்திய நாராயணா கும்மாரி, டாடா பேட்டன்ஸ் இந்தியா நிறுவன அதிகாரி சீனிவாசகோபால ரங்கராஜன், மங்கள்தீப் தலைவர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியை ரவி செந்தில்குமார் ஒருங்கிணைத்தார்.
தொழில் முனைவோர்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:
நாட்டில் 63 இடங்களில், தொழில் முனைவோர் ஒருங்கிணைப்பு மையங்கள் உள்ளன.
தமிழகத்தில், கோவை, புதுச்சேரி, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், வேலுார், சிவகாசி ஆகிய இடங்களில் துவங்கி உள்ளோம்.
ஹிந்து தொழில் முனைவோருக்கான ஆலோசனை, பங்குதாரர்கள் சேர்வது, அரசின் திட்டங்கள், தொழில் வாய்ப்புகளை உருவாக்குவது, தொழில் முனைவோராகும் நபர்களை கண்டறிவது, அவர்களுக்கு தேவையான பயிற்சி வழங்கப்படும்.
இதன் வாயிலாக, தொழில் வளர்ச்சியில் சமவாய்ப்பு கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.