திமுக.,வின் ஊதுகுழலாக செயல்படும் இபிஎஸ்: ஓபிஎஸ் கண்டனம்
திமுக.,வின் ஊதுகுழலாக செயல்படும் இபிஎஸ்: ஓபிஎஸ் கண்டனம்
ADDED : பிப் 16, 2024 10:31 AM

சென்னை: திமுக.,வின் ஊதுகுழலாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் செயல்படுவதாகவும், சுயநலத்திற்காக அவர் திமுக.,விடம் சரணாகதி அடைந்துவிட்டதாகவும், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கொள்கையில் இரட்டை நிலைப்பாட்டினை எடுத்து தி.மு.க.,வின் ஊதுகுழலாக செயல்படும் இபிஎஸ்.,க்கு கடும் கண்டனங்கள். 2022ல் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தின்போது, ''ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அடிப்படையில் 2024ல் சட்டசபைக்கு தேர்தல் வரும், இந்த ஆட்சியும் மாறும், காட்சியும் மாறும்'' எனக் கூறியவர் இபிஎஸ்.
ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை கொள்கையை அதிமுக ஆதரிக்கிறது என்றும் தெரிவித்திருந்தார். தற்போது இதிலிருந்து அந்தர் பல்டி அடித்திருக்கிறார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கோட்பாட்டினை எதிர்த்து கடந்த பிப்.14ல் சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தனித் தீர்மானம் அதிமுக.,வின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இதிலிருந்து திமுக., உடன் கைகோர்த்துவிட்டார் இபிஎஸ் என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
எந்த திமுக என்ற தீயசக்தியை எதிர்த்து எம்.ஜி.ஆர் கட்சியை துவங்கினாரோ, எந்த திமுக.,வை எதிர்த்து ஜெயலலிதா கட்சியை வளர்த்தாரோ, அதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு, திமுக.,வுடன் கைகோர்த்திருப்பது, ரகசிய உடன்பாடு செய்திருப்பது என்பது வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதற்கு அடையாளம்.
ஜெயலலிதாவின் எண்ணத்திற்கு முற்றிலும் முரணாக இபிஎஸ் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். சுயநலத்திற்காக திமுக.,விடம் சரணாகதி அடைந்துவிட்டார். கட்சியின் தனித் தன்மை தாரைவார்க்கப்பட்டு விட்டது. வரும் லோக்சபா தேர்தலில் துரோக கூட்டம் 4வது இடத்திற்கு மக்களால் துரத்தி அடிக்கப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.