வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியில் குளறுபடி: இபிஎஸ் குற்றச்சாட்டு
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியில் குளறுபடி: இபிஎஸ் குற்றச்சாட்டு
ADDED : நவ 14, 2025 05:44 PM

சேலம்: '' முறையான ஓட்டுச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்படாத காரணத்தினால், தமிழகத்தில் பல இடங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியில் குளறுபடி நடக்கிறது,'' என அதிமுக பொதுச்செயயலாளர் இபிஎஸ் கூறியுள்ளார்.
சேலத்தில் நிருபர்களை சந்தித்த இபிஎஸ் கூறியதாவது: பீஹார் சட்டசபை தேர்தலுக்கு முன்னர், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை விமர்சித்தனர். உண்மையான வாக்காளர்கள் தேர்தலில் பங்கு பெற வேண்டும் என்பற்காக இப்பணி நடந்ததுது. ஆனால், திமுக உள்ளிட்ட இண்டிக் கூட்டணி கட்சிகள் விமர்சித்தன.
பீஹாரில் தேஜ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. உண்மையான வாக்காளர்கள் மட்டுமே , வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதை மக்கள் விரும்புகின்றனர் என்பதை இந்தத் தேர்தல் முடிவு காட்டுகிறது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் அறிவிக்கப்பட்ட போது திமுக, கூட்டணி கட்சிகள் இதனை எதிர்த்தன. இறந்த வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்தன. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வசிப்பவர்கள், வேறு பகுதிக்கு குடிபெயர்ந்தனர். அப்படி குடிபெயர்ந்தவர்களின் பெயரகளும் பட்டியலில் இருந்தது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் போது இவர்கள் மற்றும் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டு, உண்மையான வாக்காளர் பட்டியல் தயாரித்து நடக்கும் தேர்தலை நேர்மையான தேர்தல்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் போது, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று படிவங்களை கொடுத்து அதனைப் பெற வேண்டும். ஆனால், தமிழகத்தில் எஸ்ஐஆர் பணி பல்வேறு நகரங்களில் சுணக்கமாக இருக்கிறது. இதில் அரசு தலையிடுகிறது. சென்னையில் ஓட்டுச்சாவடி அலுவலர்களாக நியமிக்கப்பட்டவர்கள் 4ம் வகுப்பு வரை தான் படித்துள்ளனர். அவர்கள் எப்படி படிவங்களை கொடுத்து திருத்தி வாங்க முடியும். இது குறித்து எடுத்துக்கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி முறையாக நடக்கக்கூடாது என பல அதிகாரிகள் செயல்படுகின்றனர். இது குறித்து தமிழக அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இது கண்டனத்துக்குரியது. ஓட்டுச்சாவடி அலுவலர்களாக தகுதியானவர்களை நியமிக்கப்படாததால், வாக்காளர்பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியில் பல்வேறு இடங்களில் குளறுபடி நடக்கிறது. தேர்தல் கமிஷன் தலையிட்டு உண்மையான வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு இபிஎஸ் கூறினார்.

