எம்ஜிஆரை விமர்சித்தால் திருமாவளவன் அரசியலில் காணாமல் போய் விடுவார்: இபிஎஸ்
எம்ஜிஆரை விமர்சித்தால் திருமாவளவன் அரசியலில் காணாமல் போய் விடுவார்: இபிஎஸ்
ADDED : ஆக 09, 2025 02:00 PM

ஓமலூர்: ''தமிழக மக்கள் கடவுளாக மதிக்கும் எம்ஜிஆரை விமர்சித்தால், அரசியலில் இருந்து திருமாவளவன் காணாமல் போய்விடுவார்,'' என்று அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் கூறினார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் அவர் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது;
எம்ஜிஆரை தமிழக மக்கள் தெய்வமாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அப்படிப்பட்டவரை திருமாவளவன் விமர்சனம் செய்கிறார். அப்படி செய்தால் அரசியலில் அவர் (திருமாவளவன்) காணாமல் போய்விடுவார்.
அதிமுகவை பொறுத்தவரை ஏற்கனவே நான் பல பொதுக்கூட்டங்களில் சொல்லிவிட்டேன். ஜாதிக்கு, மதத்துக்கு அப்பாற்பட்ட கட்சி. ஒரு ஜாதியை வைத்து எல்லாம் அரசியல் பண்ணுவது என்பது இயலாத காரியம்.
இன்றைக்கு தமிழகத்தை பொறுத்தவரைக்கும் அதிமுக, ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்சி கட்சி என்று பேசி வருகிறேன். எங்களின் கட்சியில் பல்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள், உள்ளனர். நாங்கள் எல்லாரும் ஒற்றுமையாக செயல்படுகிறோம்.
இந்த ஒற்றுமை அவருக்கு (திருமாவளவன்) பொறுக்கவில்லை. அவர் நினைத்தது நடக்க வில்லை என்ற எரிச்சல். அதன் வெளிப்பாடுதான் இப்படிப்பட்ட வார்த்தைகளை (எம்ஜிஆர் பற்றிய விமர்சனம்) கக்கிக் கொண்டு இருக்கிறார்.
திமுக கூட்டணியில் கருத்து வேறுபாடுகள் வந்துவிட்டன. இந்த கூட்டணி 8 மாதத்துக்கு நிலைக்குமா, நிலைக்காதா என்ற கேள்வி இருக்கிறது. தேர்தலுக்காக இன்னமும் 8 மாத காலம் இருக்கிறது. அந்த 8 மாத காலத்தில் சிறப்பான கூட்டணி அமையும்.
பாமக பொதுக்குழு என்பது தனிப்பட்ட விவகாரம். வேறு ஒரு கட்சியின் விவகாரத்தில் நாங்கள் எப்போதும் தலையிடுவது இல்லை. அது அவர்களின் (பாமக) உட்கட்சி விவகாரம். அதில் கருத்துச் சொல்வது சரியாக இருக்காது.
இவ்வாறு இபிஎஸ் கூறினார்.