இ.பி.எஸ்., ராமதாசுக்கு வேறு வேலை கிடையாது: அமைச்சர்
இ.பி.எஸ்., ராமதாசுக்கு வேறு வேலை கிடையாது: அமைச்சர்
UPDATED : நவ 25, 2024 09:58 PM
ADDED : நவ 25, 2024 09:53 PM

புதுக்கோட்டை: '' ஊழல் குற்றச்சாட்டு கூறுவதை தவிர பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு வேறு வேலை கிடையாது,'' என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் எழுப்பிய கேள்வி குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, 'அவருக்கு வேற வேலையில்லை. அதனால் தான் தினமும் அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்,' என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். இதற்கு பா.ம.க., தலைவர் அன்புமணி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி கூறியதாவது: முதல்வர் யாரையும் தரக்குறைவாக பேசும் நபர் அல்ல என்பது மக்களுக்கு தெரியும். தமிழக அரசு திறந்த புத்தகம். நாங்கள் தவறு செய்யவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டி உள்ளார். ஊழல் குற்றச்சாட்டு சுமத்துவதைத் தவிர ராமதாசுக்கு வேறு வேலை எதுவும் கிடையாது.
தி.மு.க., ஆட்சியில் போலீசாரால் துன்புறுத்தப்பட்டு யாரும் இறந்த நிகழ்வு நடக்கவில்லை. பழனிசாமிக்கு ஞாபக மறதி அதிகம். தனது ஆட்சிக்காலத்தை அவர் எண்ணிப் பார்க்க வேண்டும். அ.தி.மு.க., ஆட்சியில் தூத்துக்குடியில் நடந்தது அனைவருக்கும் தெரியும். அனைத்தையும் மறந்துவிட்டு பழனிசாமி பேசி வருகிறார். எங்கு இறப்பு நடந்தாலும் அரசை குறை சொல்வதைத் தவிர பழனிசாமிக்கு வேறு வேலை கிடையாது. இந்தியாவிலேயே பெண்களுக்கு அதிக பாதுகாப்பான மாநிலம் தமிழகம் தான். இவ்வாறு ரகுபதி கூறினார்.