மத்திய அரசுக்கு இ.பி.எஸ்., அழுத்தம் கொடுக்க வேண்டும்: சேகர்பாபு
மத்திய அரசுக்கு இ.பி.எஸ்., அழுத்தம் கொடுக்க வேண்டும்: சேகர்பாபு
ADDED : டிச 03, 2024 04:54 PM

சென்னை: '' நிதியுதவி கேட்டு மத்திய அரசுக்கு தான் பழனிசாமி அழுத்தம் கொடுக்க வேண்டுமே தவிர, தமிழக அரசுக்கு குந்தகம் விளைவிக்கக்கூடாது,'' என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
சென்னையில் நிருபர்களை சந்தித்த சேகர்பாபு கூறியதாவது: வெள்ள பாதிப்பிற்கு உதவுவதாக மத்திய அரசு அறிவிப்போடு நிற்கிறது. ஆனால், முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்து உள்ளார்.
மழை வெள்ள காலத்தில், ஆளுங்கட்சிக்கு உதவியாக இல்லாவிட்டாலும், ஆலோசனை சொன்னால் ஏற்றுக் கொள்ள முதல்வர் தயார். ஆனால், குறைகளை சுட்டிக் காட்டும் இடத்தில் இருக்கும் எதிர்க்கட்சிகள் சூழ்ச்சிகளோடு அவதூறுகளை அள்ளி வீசுகின்றன. அரசியலில் கள ஆய்வு கூட்டங்களை கூட நடத்த முடியாத சூழ்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் உள்ளார்.
சென்னைக்கும் , சேலத்திற்கு மட்டும் அரசியல் செய்கிறார். அவர், சாத்தனூர் அணை முன்னறிவிப்பு இல்லாமல் திறக்கப்பட்டதாக கூறுகிறார். சாத்தனூர் அணையில், 1.68 லட்சம் கன அடி நீர் முன்னறிவிப்பு செய்து தான் திறக்கப்பட்டது. இதனால் தான் எந்த வித உயிர்சேதமும் ஏற்படவில்லை. பல உயிர்களை அரசு காப்பாற்றி உள்ளது. மனசாட்சி இருந்தால் தமிழக அரசுக்கு பழனிசாமி நன்றி கூறியிருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு குறை சொல்கிறார். வாய்சவடால் விடும் எதிர்க்கட்சி தலைவர், நிதியுதவி கேட்டு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமே தவிர, தமிழக அரசுக்கு குந்தகம் விளைவிக்கக்கூடாது. இவ்வாறு சேகர்பாபு கூறினார்.