ADDED : செப் 08, 2025 03:30 AM

பெரம்பலுார்: வங்கி ஊழியரிடம், 88.28 லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை, போலீசார் கைது செய்தனர்.
பெரம் பலுார் மாவட்டம், லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி, 32. இவர், எஸ்.பி.ஐ., வங்கியின் இன்சூரன்ஸ் பிரிவில் ஆலோசகராக பணியாற்றுகிறார். இவரிடம், ஈரோடு மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த செந்தில்குமார், 45, என்பவர் பழகினார்.
பின் அவர், 'அறக்கட்டளை துவக்க உள்ளதாகவும், அதில் உங்களை பங்குதாரராக இணைத்துக்கொண்டால், அதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம்' எனவும், ஆசை வார்த்தை கூறினார். இதை உண்மை என நம்பிய முரளி, 88.28 லட்சம் ரூபாயை செந்தில்குமாரிடம் கொடுத்தார்.
பணத்தை பெற்ற செந்தில்குமார், அறக்கட்டளை துவக்காததால், பணத்தை திருப்பி தருமாறு முரளி கேட்டார். பணத்தை திருப்பித் தர முடியாது என கூறியதுடன், செந்தில்குமார் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
முரளி, பெரம்பலுார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார், செந்தில்குமாரை கைது செய்தனர்.