ஈரோடு போலீசார் சம்மன்; வரும் 20ம் தேதிக்குள் ஆஜராக 'கெடு'
ஈரோடு போலீசார் சம்மன்; வரும் 20ம் தேதிக்குள் ஆஜராக 'கெடு'
ADDED : பிப் 18, 2025 07:24 AM

சமீபத்தில் நடந்த ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில், நா.த.க., வேட்பாளரை ஆதரித்து சீமான் பிரசாரம் செய்தார். அசோகபுரம், நெரிக்கல்மேட்டில் ஜன., 28ம் தேதி மாலை நடந்த கூட்டத்தில், 'உன் ஈ.வெ.ரா., வைத்துள்ளது வெங்காயம்; என் தலைவன் பிரபாகரன் வைத்துள்ளது வெடிகுண்டு.
நீ, ஈ.வெ.ரா., தந்த வெங்காயத்தை என் மீது வீசு. நான் என் தலைவன் தந்த வெடிகுண்டை உன் மீது வீசுகிறேன். நான் வீசினால் உன்னை புதைத்த இடத்தில் புல் முளைக்காது.
'பி கேர் புல்' என, பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் சார்பில், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் கலவரத்தை துாண்டும் வகையில் பேசுவது, மக்களை அச்சுறுத்தும் வகையில் பேசுவது, மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட மூன்று பிரிவுகளில், கருங்கல்பாளையம் போலீசார், சீமான் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் கருங்கல்பாளையம் இன்ஸ்பெக்டர் விஜயன், சென்னை நீலாங்கரை பாலவாக்கத்தில் உள்ள சீமான் வீட்டுக்கு நேற்று சென்று சம்மன் வழங்கினார்.
அதில், 'வரும் 20ம் தேதிக்குள் கருங்கல்பாளையம் ஸ்டேஷனில் நேரில் ஆஜராகி, இப்பேச்சுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்' என்று, தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது சீமான் வீட்டில் இருந்ததாகவும், அவரே சம்மனை பெற்றுக் கொண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

