ADDED : ஆக 19, 2011 09:39 PM

சென்னை : ''கடந்த ஆட்சியில் சாராய உற்பத்திக்கு மட்டுமே, 'எத்தனால்' பயன்படுத்தப்பட்டது,'' என்று பா.ம.க., உறுப்பினர் தெரிவித்தார்.
உணவு மற்றும் கூட்டுறவுத் துறை மீது சட்டசபையில் நடந்த விவாதம்: கணேஷ்குமார் - பா.ம.க: விவசாயிகளின் கூட்டுறவு கடன்கள் கடந்த 2006ல் தள்ளுபடி செய்யப்பட்டன. ஆனால், அதில் ஐந்தில் ஒரு பங்கு தொகை இன்னும் கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படவில்லை. இதனால், சில கூட்டுறவு வங்கிகள் செயல்பட முடியாத நிலையில் உள்ளன. பொது வினியோகத் திட்டத்துக்கு உளுந்தம் பருப்பு கொள்முதல் செய்யும்போது, பெரிய அளவிலான பருப்பு தான் வாங்கப்படுகிறது. இவை பெரும்பாலும், மியான்மரில் இருந்து வாங்கப்படுகின்றன. நமது தஞ்சை, நாகை மாவட்டங்களில் சிறிய உளுந்தம் பருப்புகள் விளைகின்றன; அவற்றை வாங்குவதில்லை. இந்த இரு உளுந்தம் பருப்புக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. சிறிய பருப்பை வாங்கினால், கிலோவுக்கு ஐந்து ரூபாய் மிச்சமாவதுடன், நமது விவசாயிகளுக்கும் பலன் கிடைக்கும். எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்த, மத்திய அரசு அனுமதித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் இதற்கு எத்தனால் பயன்படுத்துவது இல்லை. முந்தைய அரசு, சாராய உற்பத்திக்கு மட்டுமே எத்தனால் பயன்படுத்தியது. எனவே, எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்த வேண்டும்.
அஸ்லாம் பாஷா - மனிதநேய மக்கள் கட்சி: முந்தைய தி.மு.க., ஆட்சியில், ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களில் நோன்பு ஆரம்பித்து, 10 நாட்களுக்கு பின்னரே அரிசி கிடைக்கும். ஆனால், நோன்பு துவங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்பே, அரிசி வழங்க இந்த அரசு உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவு பணியாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். முந்தைய ஆட்சியில் அரிசி சரியில்லாமல் இருந்தது.
அமைச்சர் செல்லூர் ராஜு: கூட்டுறவு கடைகளில் பணியாளர் பற்றாக்குறை உள்ளது. 4,239 பணியிடங்கள் காலியாக உள்ளன. அவை விரைவில் நிரப்பப்படும். முந்தைய ஆட்சியில் அரிசி சாப்பிட பயன்படுத்த முடியாத மாதிரி இருந்தது. ஆனால், தற்போது அரிசி, 'அம்மா' மாதிரி உள்ளது என்று கூறி, மக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.
மகாலிங்கம் - மார்க்சிஸ்ட்: ரேஷன் கடைகளில் பொருட்களை பாக்கெட் மூலம் வழங்க வேண்டும். 500 கார்டுதாரர்களுக்கு ஒரு கடை வீதம் அமைக்க வேண்டும். கூட்டுறவு தேர்தலை முந்தைய அரசு நடத்தியதில் முறைகேடு நடந்ததால் ரத்து செய்யப்பட்டு, தனி அலுவலர்களது பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதற்கென தனி தேர்தல் கமிஷன் அமைத்து, கூட்டுறவு சங்கத் தேர்தலை நடத்த வேண்டும். ரேஷன் கடைகளில் 20 சதவீதம் பெண்கள் பணிபுரிகின்றனர். அவர்கள், அதிக எடையுள்ள மூட்டைகளை கையாள்வது கடினம். எனவே, அதிக எண்ணிக்கையில், எடையாளர்களை நியமிக்க வேண்டும்.
லிங்கமுத்து - இந்திய கம்யூ.,: ரேஷன் கார்டுகள் பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது; குளறுபடிகளும் நடக்கின்றன. பழைய அட்டையைப் பிரித்து, புதிய குடும்ப அட்டை வாங்க முடிவதில்லை. புது அட்டை கோரி வரும் விண்ணப்பங்கள் மீது விசாரணை நடத்தி, ஒரு வாரத்துக்குள் கார்டுகள் வழங்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.