3 நிறுவனங்களாக பிரிக்கப்பட்ட பின்னும் மின் பகிர்மான கழகத்தின் கடன் குறையவில்லை
3 நிறுவனங்களாக பிரிக்கப்பட்ட பின்னும் மின் பகிர்மான கழகத்தின் கடன் குறையவில்லை
ADDED : நவ 09, 2025 02:11 AM
* சென்னை: தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிதி நெருக்கடியை குறைக்க, அது பசுமை எரிசக்தி கழகம், மின் உற்பத்தி கழகம், மின் பகிர்மான கழகம் ஆகிய மூன்று நிறுவனங்களாக பிரிக்கப்பட்டது. இருப்பினும், மூன்று நிறுவனங்களின் நிர்வாக செலவுகளை, பகிர்மான கழகம் மட்டுமே செய்வதால், அந்நிறுவனத்தின் நிதி நெருக்கடி மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக மின் வாரியத்தின் கீழ், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மின் தொரடமைப்பு கழகம் ஆகிய நிறுவனங்கள் செயல்பட்டன. இதில், மின் வினியோகம் உள்ளிட்ட பணிகளை, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மேற்கொண்டது. இந்நிறுவனத்துக்கு, மின் கட்டணம் வசூல், அரசு மானியம் ஆகியவை வாயிலாக வருவாய் கிடைக்கிறது.
வரவை விட, செலவு அதிகம் இருந்ததால் ஆண்டுக்கு சராசரியாக, 10,000 கோடி ரூபாய்க்கு இழப்பை சந்தித்தது. எனவே, புதிய மின் திட்டங்களுக்கு, மத்திய அரசின் நிதி நிறுவனங்கள், வங்கிகளில் கடன் வாங்கப்பட்டது.
கடந்த ஆண்டு நிலவரப்படி, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கடன், 1.60 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்தது. இதில் அதிக அளவாக, தமிழக அரசின் பவர் பைனான்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்ட கடன், 45,850 கோடி ரூபாயாக உள்ளது.
எனவே, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிதி நெருக்கடியை குறைக்க, பசுமை எரிசக்தி கழகம், மின் உற்பத்தி கழகம், மின் பகிர்மான கழகம் என, மூன்று நிறுவனங்களாக, 2024ல் பிரிக்கப்பட்டன.
அவற்றுக்கு தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இருப்பினும், மூன்று நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் நிர்வாக செலவுகள் அனைத்தையும், பகிர்மான கழகமே செய்கிறது. இதனால், அந்நிறுவனத்தின் நிதி நெருக்கடி குறையாமல், தொடர்ந்து அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மின் பகிர்மான கழகம் இழப்பை சந்தித்தாலும், மின் கட்டணம் வாயிலாக மாதந்தோறும் வருவாய் கிடைக்கிறது.
காற்றாலை, சூரியசக்தி மின் திட்டங்கள் வாயிலாக வணிகத்தில் ஈடுபட, பசுமை எரிசக்தி கழகத்துக்கு அனுமதி கிடைத்து விட்டது. எனவே, அந்நிறுவனமும், மின் உற்பத்தி கழகமும் விரைவில் வருவாய் ஈட்ட உள்ளன.
இதனால், பகிர்மான கழகத்தின் செலவுகளை, மற்ற இரு நிறுவனங்களும் வழங்கிவிடும். வரும் காலங்களில் தனித்தனியே செலவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

