கருணை அடிப்படையில் வேலை கிடைத்தும் தீரவில்லை கவலை!
கருணை அடிப்படையில் வேலை கிடைத்தும் தீரவில்லை கவலை!
ADDED : மார் 04, 2024 04:47 AM

கருணை அடிப்படையில் வேலை தரப்பட்டும், வெவ்வேறு மாவட்டங்களில் பணி அமர்த்தப்பட்டதால், சென்னை போலீசாரின் வாரிசுகள், பெரும் வருத்தத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் காவல்துறையில் பணியாற்றி, பல்வேறு காரணங்களால், பணியின்போது இறப்பவர்களின் வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படும் என்று, கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, தி.மு.க., சார்பில் வாக்குறுதி கொடுக்கப்பட்டது.
பணிவாய்ப்பு
ஆட்சிக்கு வந்தபின், 2021- 2022 காவல்துறை மானியக்கோரிக்கையிலும், இதுபற்றி முதல்வர் அறிவித்தார்.
பணியின்போது இறந்த 1,132 போலீசாரின் வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில் வரவேற்பாளர், தகவல் பதிவு உதவியாளர் ஆகிய பணியிடங்களில் நியமிக்கப்படுவர் என்று, அப்போது அறிவிக்கப்பட்டது.
அதன்படி, முதற்கட்டமாக 457 ஆண்கள், 455 பெண்கள் என மொத்தம் 952 பேருக்கு, கடந்த ஆகஸ்டில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
இவர்களில், 196 பேர், சென்னையைச் சேர்ந்தவர்கள்; சென்னையிலேயே பணி வாய்ப்பு வழங்கப்படும் என்று, அவர்களின் குடும்பத்தினர் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், சென்னைவாசிகள் இருவருக்கு மட்டுமே, மாநகர காவல் துறையில் பணிவாய்ப்பு வழங்கப்பட்டது; ரயில்வே போலீசில், 10க்கும் குறைவானவர்கள் நியமிக்கப்பட்டனர்.
மற்றவர்களுக்கு, தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்கள் மற்றும் அலுவலகங்களில் வரவேற்பாளர்கள் மற்றும் தகவல் பதிவு உதவியாளர்களாக பணி நியமனம் வழங்கப்பட்டது.
தற்காலிகமாகவே வெளி மாவட்டங்களில் பணி நியமனம் தரப்பட்டுள்ளது; விரைவில் சென்னைக்கு மாறுதல் தரப்படும் என்று எல்லாரும் எதிர்பார்த்த நிலையில், 'மாவட்டங்களுக்காகவே பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது; மாற்ற வாய்ப்பில்லை' என்று, காவல் தலைமையிடம் இவர்களின் கோரிக்கைகளை நிராகரித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
சென்னையில் பிறந்து வளர்ந்து, திருமணமாகி செட்டில் ஆகியுள்ள பலரும், தங்கள் கணவன் அல்லது மனைவி, குழந்தைகள், தாய் அல்லது தந்தையை விட்டு, வெளி மாவட்டங்களில் தங்கி பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
கோரிக்கை
அதிலும் பெண்கள் பலர், தங்கள் குழந்தைகளை விட்டுவிட்டு, மன உளைச்சலுடன் வேலை செய்கின்றனர்.
சென்னை மாநகர காவல் துறையிலேயே, 155க்கும் மேற்பட்ட போலீஸ் ஸ்டேஷன்கள் மற்றும் ஏராளமான அலுவலகங்கள் இருக்கும் நிலையில், இவர்களுக்கு சென்னையிலேயே பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே, இவர்களின் ஒருமித்த கோரிக்கை.
கருணை அடிப்படையில் வேலை கொடுத்த முதல்வர், இதிலும் இவர்களுக்கு கருணை காட்டினால் நல்லது.
-நமது சிறப்பு நிருபர் -

