இருசக்கர வாகனத்தில் இடியாப்பம் விற்றாலும் உணவு பாதுகாப்பு உரிமம் பெறுவது கட்டாயம்
இருசக்கர வாகனத்தில் இடியாப்பம் விற்றாலும் உணவு பாதுகாப்பு உரிமம் பெறுவது கட்டாயம்
ADDED : டிச 26, 2025 02:07 AM

சென்னை: 'சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில், இடியாப்பம் விற்பனை செய்பவர்கள், இனி உணவு பாதுகாப்பு உரிமம் பெற வேண்டும்' என, தமிழக உணவு பாதுகாப்பு துறை கூறியுள்ளது.
தமிழகத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில், இடியாப்பம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சைக்கிள், இருசக்கர வாகனங்களில் வைத்து, வீடுகளுக்கே வந்து இடியாப்பம், வடகறி ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன.
சென்னை போன்ற நகர பகுதிகளில், இடியாப்பம் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், அதன் சுகாதாரம் மற்றும் தரம் குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. சில நேரங்களில், இந்த இடியாப்பத்தை சாப்பிடுவோருக்கு, வயிற்று பிரச்னை, ஜீரண பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்றன.
எனவே, இடியாப்ப விற்பனையை ஒழுங்குப்படுத்தும் வகையில், தமிழக உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் இடியாப்பம் விற்பனை செய்பவர்கள், https://foscos.fssai.gov.in/ என்ற இணையதளத்தில் கட்டாயம் பதிவு செய்து, உரிமம் பெற்றிருக்க வேண்டும். அவர்கள் சாலையோர வியாபாரிகள் என்ற கணக்கில் வருவதால், அவர்கள் கட்டணம் இல்லாமல் பதிவு செய்யலாம்.
அதே நேரத்தில், இடியாப்பம் தயாரிப்பாளர்களுக்கு, மொத்த விற்பனை அடிப்படையில், பதிவு உரிமத்திற்கான கட்டணம் இருக்கும். ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை விற்பனை நடந்தால், 3,000 ரூபாய் உரிமம் கட்டணம் இருக்கும்.
அதற்கு குறைவாக விற்பனை நடந்தால், ஆண்டுக்கு, 100 ரூபாய் கட்டணமாக உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிப்பதும் அவசியம்.
அதேபோல், இடியாப்பம் தயாரிப்பவர்கள், சுகாதாரமாகவும், பாதுகாப்பாகவும் தயாரிக்க வேண்டும். இடியாப்பம் விற்பனை செய்பவர்கள், காய்ச்சல், நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தால், விற்பனையில் ஈடுபடக்கூடாது.
வரும் ஜன., மாதம் முதல், பதிவு உரிமம் பெற்றுள்ளனரா என்பது குறித்தும், இடியாப்பம், வடகறியின் தரம் குறித்தும் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

