போலீஸ் ஸ்டேஷனுக்கே பாதுகாப்பில்லை; தி.மு.க., சாதனை பட்டியலில் சேர்த்துக்கோங்க; இ.பி.எஸ்., கிண்டல்
போலீஸ் ஸ்டேஷனுக்கே பாதுகாப்பில்லை; தி.மு.க., சாதனை பட்டியலில் சேர்த்துக்கோங்க; இ.பி.எஸ்., கிண்டல்
UPDATED : ஜூன் 14, 2025 01:43 PM
ADDED : ஜூன் 14, 2025 12:38 PM

சென்னை: தி.மு.க., ஆட்சியில் போலீஸ் ஸ்டேஷனுக்கே பாதுகாப்பில்லை. இதனை தி.மு.க.,வின் 4 ஆண்டு கால ஆட்சியின் சாதனை பட்டியலில் சேர்க்க வேண்டும் என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., விமர்சனம் செய்துள்ளார்.
அவரது அறிக்கை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள V. சத்திரப்பட்டி ஸ்டேஷனுக்குள் புகுந்த மர்மநபர்கள் தாக்கி, சூறையாடியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இதனையடுத்து, எனது அறிவுறுத்தலின்படி, சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் நேரில் பார்வையிடச் சென்றபோது, கைது செய்யப்பட்டுள்ளதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
சாதனை பட்டியல்
தி.மு.க., ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை; மக்களைக் காக்க வேண்டிய போலீசாருக்கு பாதுகாப்பு இல்லை; தற்போது உச்சத்தின் உச்சமாக போலீஸ் ஸ்டேஷனுக்கே பாதுகாப்பு இல்லை. 4 ஆண்டு ஆட்சியின் சாதனைப் பட்டியலில் முதலில் சேர்க்க வேண்டிய சாதனை இது தான்.
உங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷன் தாக்குதலுக்கு உள்ளாவது வெட்கமாக இல்லையா முதல்வரே? போலீஸ் ஸ்டேஷனையே காக்க முடியாத இந்த முதல்வர், தமிழக மக்களை எப்படி காக்கப் போகிறார்?
சட்ட நடவடிக்கை
வாய்ப்பே இல்லை. போலீஸ் ஸ்டேஷனில் தாக்குதுல் நடத்தியவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க., அரசை வலியுறுத்துகிறேன். எப்போதும் நான் சொல்வதை மீண்டும் தமிழக மக்களுக்கு ஒருமுறை சொல்லிக்கொள்ள விழைகிறேன். மக்களே, தி.மு.க., ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு. இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.