வழக்கில் சிக்கியவரும் வெளிநாடு செல்லலாம்; 'லுக் அவுட்' நோட்டீசை நிறுத்த முடியும் என கோர்ட் உத்தரவு
வழக்கில் சிக்கியவரும் வெளிநாடு செல்லலாம்; 'லுக் அவுட்' நோட்டீசை நிறுத்த முடியும் என கோர்ட் உத்தரவு
ADDED : டிச 09, 2024 03:44 AM

சென்னை : 'வழக்குகளில் குற்றம் சாட்டப்படுபவர்கள் வெளிநாடு செல்வதை தடுக்காமல், அவர்கள் இந்தியா திரும்புவதை உறுதி செய்யும் விதமாக நிபந்தனைகள் விதித்து, 'லுக் அவுட்' நோட்டீசை நிறுத்தி வைக்கலாம்' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
போலி நிறுவனங்கள் துவங்க உதவியதாக, நிறுவன ஆலோசகரான பாதன் அப்சர் என்பவருக்கு எதிராக, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்தது. துபாய் செல்ல ைஹதராபாத் விமான நிலையம் வந்த போது, அவருக்கு எதிராக, 'லுக் அவுட் நோட்டீஸ்' பிறப்பித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதனால், வெளிநாடு செல்ல முடியவில்லை.
தனக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்ததை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் பாதன் வழக்கு தொடர்ந்தார். அதேபோல, சரவணன் என்ற தொழில் அதிபரும், தனக்கு எதிரான லுக் அவுட் நோட்டீசை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்.
இரண்டு மனுக்களும், நீதிபதி என்.சேஷசாயி முன், விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர் ஆர்.சங்கரநாராயணன் ஆஜரானார்.
வாழ்வியல் உரிமை
மனுக்களை விசாரித்த, நீதிபதி என்.சேஷசாயி பிறப்பித்த உத்தரவு: ஒருவரது வளர்ச்சி, வளத்துக்கான உரிமையில், சட்டப்படியான நடைமுறையை பின்பற்றாமல், எந்த தடையும் விதிக்க முடியாது. வாழ்வியல் உரிமையில் வளர்ச்சியும், வளமும் இருக்கும் போது, வெளிநாடு செல்லும் உரிமையும் உள்ளது.
ஒருவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கும் போது, விமான நிலையத்தில் உள்ள குடியேற்ற அலுவலகம் வரை அவர் செல்லலாம்; விமானத்தில் ஏற முடியாது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர், புலன் விசாரணையின் போதோ அல்லது வழக்கு விசாரணையின் போதோ, குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டால் தண்டனையை அனுபவிக்கவோ, அவர் இங்கு இருக்க வேண்டும்.
அதற்காக, வெளிநாடு செல்வதற்கான உரிமையை கட்டுப்படுத்துவதில், எந்த அர்த்தமும் இல்லை. வெளிநாடு செல்வதை எப்படி நிறுத்துவது என்று இல்லாமல், அவர் வெளிநாட்டில் இருந்து திரும்புவதை உறுதி செய்யும் விதமாக இருக்க வேண்டும்.
எனவே, சட்டத்தில் உள்ள நடைமுறையை பின்பற்றி, குற்றம் சாட்டப்பட்டவரின் வெளிநாட்டு பயண உரிமையில் நியாயமான கட்டுப்பாடுகளை விதிக்கலாம். லுக் அவுட் நோட்டீசுக்கு மாற்றாக இறுதி வடிவம் கிடைக்கும் வரை, தனி நபரின் பயண உரிமையை பாதிக்காத வகையில், அது நீடிக்கலாம்.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் வெளிநாடு செல்ல வேண்டும் என்றால், லுக் அவுட் நோட்டீசை நிறுத்தி வைக்கக்கோரி, விசாரணை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யலாம்.
சொத்து உத்தரவாதம்
இந்த மனுவை விசாரிக்கும் நீதிமன்றம், குறிப்பிட்ட தொகையை அல்லது அதற்கு ஈடாக சொத்துக்களை, 'டிபாசிட்' செய்ய நிபந்தனை விதிக்கலாம். உறவினர் அல்லது பங்குதாரர்களின் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க உத்தரவிடலாம். இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யும்பட்சத்தில், நோட்டீசை நிறுத்தி வைக்கலாம்.
மனுதாரர்களின் மனுக்களை பொறுத்தவரை, தலா, 10 லட்சம் ரூபாய்க்கு சொந்த உத்தரவாதமும், இரு நபர் உத்தரவாதமும் அளிக்க வேண்டும். நிபந்தனைகளை பூர்த்தி செய்யும்பட்சத்தில், லுக் அவுட் நோட்டீசை நிறுத்தி வைக்க உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.