UPDATED : டிச 12, 2024 09:36 AM
ADDED : டிச 12, 2024 09:28 AM

'இது என்ன புதுவிதமான அரசியலாக இருக்கிறது. எல்லா அரசியல்வாதிகளும் சொல்லி வைத்தது போல், ஒரே மாதிரியாக செயல்படுகின்றனரே...' என, ஆச்சரியப்படுகின்றனர், அரசியல் விமர்சகர்கள்.
டில்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிறையில் இருந்தபோது, அவரது மனைவி சுனிதா, கட்சி வேலைகளைமுன்னின்று செய்தார். எதிர்க்கட்சி கூட்டணிசார்பில் டில்லி, ராஞ்சியில் நடந்த கூட்டங்களிலும் பங்கேற்றார். வரும் ஜனவரியில் நடக்கவுள்ள டில்லி சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி சார்பில் சுனிதா களம் இறங்கினாலும் ஆச்சரியமில்லை.
ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா, ஏற்கனவே ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் எம்.எல்.ஏ.,வாகி விட்டார். சமீபத்தில்நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், இவரது பிரசாரம் கட்சியின் வெற்றிக்கு வித்திட்டது. அடுத்ததாக, ஹிமாச்சல பிரதேச முதல்வரும், காங்கிரசைச் சேர்ந்தவருமான சுக்விந்தர் சுகுவும்,தன் மனைவி கம்லேஷ் தாக்குரை, இடைத்தேர்தலில் நிறுத்தி வெற்றி பெற வைத்து, எம்.எல்.ஏ.,வாக்கி அழகு பார்த்துள்ளார்.
இதைப் பார்க்கும் அரசியல் விமர்சகர்கள்,'இப்போதுள்ள அரசியல்வாதிகள், கட்சி நிர்வாகிகளை விட, மனைவி மீதுதான் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர்; இனி, மனைவிகள் ராஜ்ஜியம் தான்...' என, கிண்டல் அடிக்கின்றனர்.