'அனைவரும் ஒன்று என்பதுதான் சனாதனம்': சொல்கிறார் கவர்னர் ரவி
'அனைவரும் ஒன்று என்பதுதான் சனாதனம்': சொல்கிறார் கவர்னர் ரவி
UPDATED : அக் 05, 2024 09:19 PM
ADDED : அக் 05, 2024 02:27 PM

சென்னை: 'சனாதன தர்மத்தில் வேறுபாடு இல்லை. பெரியவர், சிறியவர் இல்லை. அனைவரும் ஒன்று என்பது தான் சனாதனம்' என கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
சென்னையில், வள்ளலார் சிலைக்கு, கவர்னர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார். வள்ளலார் பெருவிழா நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: அனைவரும் ஒன்று என்பது தான் சனாதன தர்மம். சனாதன தர்மத்தில் வேறுபாடு இல்லை. பெரியவர், சிறியவர் இல்லை. சனாதன தர்மத்தில் வேறுபாடு காட்டி சிலர் குளிர்காய விரும்புகிறார்கள். இதற்கு அவசியம் இல்லை. சிலர் சனாதனத்தை ஜாதியோடு தொடர்புபடுத்தி பேசி, தவறான புரிதலை ஏற்படுத்துகிறார்கள்.
சனாதனவாதி
இன்று நிகழும் நிகழ்வு மிகவும் புனிதமான ஒன்று. இன்றைய தினம் நம் அனைவருக்கும் வள்ளலாரின் அருள் கிடைக்க பிரார்த்தனை செய்கிறேன். ஒரு சங்கடமான சூழலில் நாடு கஷ்டப்பட்ட போது வள்ளலார் அவதரித்தார். எந்த உயிருக்கும் இடையூறு வந்தாலும் அதனை காக்க வேண்டும் என்பது தான் நமக்கு கற்பித்த பாடம். மனிதன், விலங்கு என அனைவரும் ஒன்றிணைவது தான் சனாதனம். ஜாதி பார்ப்பவர்கள் சனாதனவாதியாக இருக்க முடியாது. சனாதன தர்மம் எந்த ஏற்றத்தாழ்வையும் கூறவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.