பெண்கள் உடல்களை புதைத்த இடத்தில் தோண்டும் பணி... துவக்கம்!; தர்மஸ்தலாவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விறுவிறுப்பு
பெண்கள் உடல்களை புதைத்த இடத்தில் தோண்டும் பணி... துவக்கம்!; தர்மஸ்தலாவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விறுவிறுப்பு
ADDED : ஜூலை 30, 2025 07:05 AM

தட்சிண கன்னடாவின் பெல்தங்கடி தாலுகா, தர்மஸ்தலாவில் புகழ்பெற்ற மஞ்சுநாநா கோவில் உள்ளது. இதன் அருகே ஓடும் நேத்ராவதி ஆற்றின் கரையோர பகுதிகளில், பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் உடல்களை புதைத்ததாக, கோவிலில் வேலை செய்த முன்னாள் துாய்மை பணியாளர் அளித்த புகாரில், எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழுவை அரசு அமைத்தது.
இந்த குழுவினர் மங்களூரு வந்தனர். புகார் அளித்தவரிடம், இரண்டு நாட்களில் 14 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
உடல்கள் புதைக்கப்பட்ட இடங்களை அடையாளம் காட்ட, புகார் அளித்தவரை நேற்று முன்தினம் எஸ்.ஐ.டி., குழுவினர் அழைத்து சென்றனர். நேத்ராவதி ஆற்றை ஒட்டி உள்ள அடர்ந்த வனப்பகுதியை புகார் அளித்தவர் காண்பித்தார். தொடர்ந்து, மேலும் 12 இடங்களை அடையாளம் காட்டினார்.
'மார்க்கிங்' இதையடுத்து, 13 இடங்களையும், எஸ்.ஐ.டி., குழுவினர், 'மார்க்கிங்' செய்தனர். அந்த இடங்களுக்குள் யாரும் நுழைந்து விடாத வகையில் சுற்றி, 'டேப்' ஒட்டப்பட்டது. தடயங்களை யாரும் அழித்து விடாமல் தடுக்க, மார்க்கிங் செய்யப்பட்ட இடங்களில், நக்சல் ஒழிப்பு படையினர், போலீசார் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று மதியம் 12:30 மணிக்கு, புகார்தாரர் அடையாளம் காட்டிய முதல் இடமான, நேத்ராவதி ஆற்றின் கரையோர வனப்பகுதிக்குள் தோண்டும் பணி நடந்தது. எஸ்.ஐ.டி., விசாரணை அதிகாரி அனுசேத், புத்துார் உதவி கலெக்டர் ஸ்டெல்லா வர்க்கீஸ் மேற்பார்வையில், தர்மஸ்தலா கிராம பஞ்சாயத்தில் வேலை செய்யும் 13 ஊழியர்கள் மண்வெட்டி, கடப்பாரையுடன் தோண்ட ஆரம்பித்தனர். மருத்துவ அதிகாரிகள் இருவர், தடய அறிவியல் ஆய்வக அதிகாரிகளும் அங்கு இருந்தனர்.பள்ளம் தோண்டியது வீடியோவும் எடுக்கப்பட்டது.
தண்ணீர் வந்தது தொடர்ந்து இரண்டு மணி நேரம் அதாவது மதியம் 2:30 மணி வரை, 4 அடி பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் எலும்பு கூடோ, சந்தேகம்படும்படியான பொருட்களை கிடைக்கவில்லை.
திடீரென பள்ளம் தோண்டிய இடத்தில், தண்ணீர் வர ஆரம்பித்தது. இதற்கு மேல் தங்களால் தோண்ட முடியாது என்று, கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் ஒதுங்கி கொண்டனர்.
ஆனாலும் புகார் அளித்தவர், எஸ்.ஐ.டி., அதிகாரி அனுசேத்திடம், 'இந்த இடத்தில் பல பெண்களின் உடல்களை புதைத்து உள்ளேன்.
பல ஆண்டுகள் ஆகி விட்டதால் உடல்கள் இன்னும் ஆழமாக சென்றிருக்க வாய்ப்பு உள்ளது. இங்கு தொடர்ந்து தோண்டினால் எலும்பு கூடுகள் கிடைக்கும்' என்று கூறினார்.
மோப்ப நாய் இதையடுத்து, பெல்தங்கடியில் இருந்து, மினி ஹிட்டாச்சி இயந்திரம் வரவழைக்கப்பட்டது.மாலை 3:30 மணியில் இருந்து மாலை 6:00 மணி வரை மேலும் 4 அடிக்கு பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் எதுவுமே கிடைக்கவில்லை.
உடல்களை மோப்பம் பிடிக்க மோப்ப நாய்களும் அழைத்து வரப்பட்டன. சிறிது நேரம் மட்டுமே நாய்கள் மோப்பம் பிடித்த நிலையில், இருட்டாகி விட்டது. இதனால் தோண்டும் பணி நிறுத்தப்பட்டது. இன்று இரண்டாவது நாளாக பணிகள் நடக்க உள்ளன.
உடல்கள் புதைக்கப்பட்ட இடங்களை, அடையாளம் காட்ட நேற்று முன்தினம் புகார்தாரரை அழைத்து வந்த போது, ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் 13 இடங்களையும் காண்பித்தார். ஆனால், அவர் கூறிய முதல் இடத்தில், 8 அடிக்கு பள்ளம் தோண்டியும் எலும்பு கூடுகள் கிடைக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. முதல் இடத்தில் கிடைக்காவிட்டால் அடுத்த 12 இடங்களும் தோண்டப்படும்.
இதுகுறித்து எஸ்.ஐ.டி., குழு அதிகாரி அனுசேத் கூறுகையில், ''சாட்சி திருப்தி அடையும் வரை, அவர் அடையாளம் காட்டிய இடத்தில் தோண்டப்படும்.
'' இனி தோண்ட வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் கூறினால் மட்டுமே, அந்த இடத்தில் தோண்டுவது நிறுத்தப்படும். இப்போதைக்கு ஒரு இடத்தில் தான் தோண்டி உள்ளோம். இந்த இடத்தில் முழு நடைமுறையும் முடிந்த பின் தான், அடுத்த இடத்தில் தோண்ட துவங்குவோம்,'' என்றார்.
இப்பணியால், அப்பகுதி முழுதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

