ADDED : ஜன 29, 2024 05:51 AM
சென்னை: தேர்தல் கால இடமாறு தலில், பதிவுத்துறைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக பரவும் தகவலால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பொதுத்தேர்தல் நடக்கும்போது, தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியில் இருப்போர், இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம்.
லோக்சபா தேர்தல் ஏப்., - மே மாதங்களில் நடக்க உள்ளதால், தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, இடமாற்ற நடவடிக்கைகள் துவங்கி உள்ளன.
தேர்தல் பணியில் இருப்பவர், சொந்த மாவட்டத்தில் பொறுப்பில் இருப்பதை தவிர்க்க வேண்டும். மூன்று ஆண்டுகளாக பதவி உயர்வு வாயிலாக, ஒரே இடத்தில் இருந்தாலும் மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் உள்ளன.
இந்த விதிகளை அனைத்து துறைகளும் கடைப்பிடித்து வரும் நிலையில், பதிவுத்துறைக்கு பொருந்தாது என, சார் -- பதிவாளர்கள் சங்கம் தரப்பில் கூறப்பட்டு வருவது, அலுவலர்கள் மட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, பதிவுத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: தேர்தல் நடத்தை விதிகளின்படி பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் அனைத்து துறைகளுக்கும் பொதுவானது. இதில், எந்த துறைக்கும், யாருக்கும் விதிவிலக்கு அளிக்க வாய்ப்பில்லை.
யாருக்காவது விலக்கு அளிப்பது என்றால், தேர்தல் கமிஷன் தான் முடிவு செய்யும். இதுவரை, யாருக்கும் விதிவிலக்கு தரப்படவில்லை. பதிவுத்துறை தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.