ADDED : செப் 27, 2024 09:52 PM
சென்னை:தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை கட்டுப்பாட்டில், 1,140 பள்ளி மாணவ - மாணவியர் விடுதிகள்; 152 கல்லுாரி மாணவ - மாணவியர் விடுதிகள்; 18 ஐ.டி.ஐ., மாணவர் விடுதிகள்; ஐந்து பாலிடெக்னிக் விடுதிகள்; 15 முதுகலை பட்டதாரி கல்லுாரி விடுதிகள் என, மொத்தம், 1,331 விடுதிகள் உள்ளன. இவற்றில், 98,00க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் தங்கிப் படிக்கின்றனர்.
விடுதியில் படிக்கும் மாணவர்களுக்கு, உணவு மானியமாக, பள்ளி மாணவருக்கு மாதம், 1,400 ரூபாய்; கல்லுாரி மாணவருக்கு மாதம், 1,500 ரூபாய் வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்கான, அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை, அரசு நேரடியாக விடுதிகளுக்கு வழங்குகிறது. காய்கறிகள், காஸ், மட்டன் வாங்குவதற்கு தேவையான பணம், விடுதிக் காப்பாளர்களிடம் வழங்கப்படுகிறது.
இப்பணத்தை மாதந்தோறும் வழங்காமல், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வழங்குகின்றனர். அதனால், விடுதி காப்பாளர்கள், காய்கறி, மட்டன், காஸ் போன்றவற்றை, கடனுக்கு வெளியில் வாங்குகின்றனர்.
அரசு பணம் வழங்கிய பின், கடன் தொகையை செலுத்துகின்றனர். சில மாவட்டங்களில், பணம் வர நான்கு மாதங்களுக்கு மேலாகிறது. அப்போது, கடன் கொடுப்பவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுக்கின்றனர்.
இதனால், விடுதிக் காப்பாளர்கள், தங்களின் சொந்த பணத்தை வழங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க, மாணவர்கள் உணவுக்கு ஒதுக்கப்படும் தொகையை, மாதந்தோறும் வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விடுதிக் காப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.