பெரியாறு அணையில் நிபுணர் குழு ஆய்வு: பாரபட்சமின்றி மதிப்பீடு செய்வதாக உறுதி
பெரியாறு அணையில் நிபுணர் குழு ஆய்வு: பாரபட்சமின்றி மதிப்பீடு செய்வதாக உறுதி
ADDED : செப் 02, 2026 10:24 PM

கூடலுார்: முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து, விரிவான மதிப்பீட்டு நிபுணர் குழு அணையை ஆய்வு செய்த பின், 'பாரபட்சமின்றி மதிப்பீடு செய்யப்படும்' என, உறுதி அளித்துள்ளது.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லை பெரியாறு அணை, தமிழக நீர் வளத்துறை பராமரிப்பில் உள்ளது. தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்தின் கீழ் அமைக்கப்பட்ட மதிப்பீட்டு நிபுணர் குழு அணைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டது.
குழு தலைவர் பல்ராஜ் ஜோஷி தலைமையிலான உறுப்பினர்கள், தேக்கடியில் இருந்து தமிழக நீர் வளத்துறைக்கு சொந்தமான படகில் அணை பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தினர். மெயின் அணை, பேபி அணை, மண் அணை, கேரள பகுதிக்கு வெளியேறும் 13 ஷட்டர் பகுதி ஆகியவற்றை பார்வையிட்டனர்.
அணையின் கட்டமைப்பு, உறுதித்தன்மை, கசிவு நீர், அடித்தள அழுத்தம், பாறை மற்றும் மண்ணின் நிலைத்தன்மை, அதிகபட்ச வெள்ள அளவு நீர் வெளியேற்று அமைப்புகள், கண்காணிப்பு கருவிகள், வண்டல் மண் தேக்கம், நீர் தேக்க திறன் உள்ளிட்ட பல்வேறு நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டது.
தொடர்ந்து, நிலநடுக்க தாங்கும் திறன், நில நடுக்கத்தை பதிவு செய்யும் கருவிகளின் செயல்பாடு, அவற்றில் பதிவாகியுள்ள தரவுகள் ஆகியவற்றையும் ஆய்வு செய்தனர்.
இரண்டாம் நாள் ஆலோசனை கூட்டம், தேக்கடியில் நடந்தது. குழுவினரின் கேள்விக்கு, இரு மாநில அதிகாரிகள் பதில் அளித்தனர். அணை உறுதித்தன்மை, பல்வேறு நிபுணர் குழுக்களின் ஆய்வறிக்கை, பராமரிப்பு பணி விபரம், பேபி அணையை பலப்படுத்த கேரளாவின் எதிர்ப்பு, அணையில் செய்ய வேண்டிய பராமரிப்பு ஆகிய அனைத்தையும், உரிய ஆதாரங்களுடன் தமிழக அதிகாரிகள் விளக்கினர்.
அனைத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து, கேரள அதிகாரிகள் காரசார விவாதங்களில் ஈடுபட்டனர். பழமையான அணை பலம் இழந்துள்ளதாகவும், கேரள மக்களின் அச்சம் குறித்தும், கேரள அதிகாரிகள் வாதம் செய்தனர்.
பல்ராஜ் ஜோஷி கூறியதாவது:
விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. பழமையான அணையின் கட்டமைப்பு, தற்போதைய வடிவமைப்பு, பொறியியல் அம்சங்கள் ஆகியவை நடைமுறையில் உள்ள நவீன பொறியியல் தர நிலைகளுடன் பொருந்துகின்றதா என்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. பாரபட்சமின்றி தொழில்நுட்ப ரீதியாக மதிப்பீடு செய்யப்படும். இதன் விரிவான ஆய்வு அறிக்கை தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்திடம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
