ஒட்டு கேட்கும் கருவி பொருத்திய விவகாரம்: தைலாபுரத்தில் நிபுணர் குழு தீவிர ஆய்வு
ஒட்டு கேட்கும் கருவி பொருத்திய விவகாரம்: தைலாபுரத்தில் நிபுணர் குழு தீவிர ஆய்வு
UPDATED : ஜூலை 14, 2025 06:38 AM
ADDED : ஜூலை 14, 2025 01:37 AM

திண்டிவனம்: தைலாபுரம் தோட்டத்தில் ஒட்டு கேட்கும் கருவி பொருத்தப்பட்டது தொடர்பாக, தனியார் துப்பறியும் ஏஜென்சியின் அறிக்கை நான்கு நாட்களுக்குள், பா.ம.க., நிறுவனர் ராமதாசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு தெரியாமல், அவரது இருக்கை அருகே ஒட்டு கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்தது.
சென்னையில் உள்ள தனியார் துப்பறியும் ஏஜென்சி மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டு, ராமதாசிடம் தெரிவிக்கப்பட்டது.
லண்டனிலிருந்து வாங்கப்பட்ட விலை உயர்ந்த அந்த ஒட்டு கேட்கும் கருவியை வைத்தது யார், பின்னணியில் யார் உள்ளனர் என்பது குறித்து விசாரித்து வருவதாக, ராமதாஸ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கடந்த 12 மற்றும் 13ம் தேதி என இரண்டு நாட்கள், தனியார் துப்பறியும் ஏஜென்சியை சேர்ந்த ஐந்து பேர் தைலாபுரம் தோட்டத்தில், அங்குலம் அங்குலமாக தீவிரமாக சோதனை நடத்தினர்.
கைப்பற்றப்பட்ட ஒட்டு கேட்கும் கருவியில் பொருத்தப்பட்டுள்ள, 'சிம்'மில் பதிவான தரவுகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், அக்கருவி ஆறு மாதங்களுக்கு முன் அங்கு வைக்கப்பட்டிருக்கலாம் என, அவர்கள் தெரிவித்தனர்.
தோட்டத்தில் நடந்த முக்கிய பிரச்னை குறித்து மூன்று பேர் தனியாக பேசிய விபரம், உடனடியாக எதிர்தரப்பின் முக்கிய பிரமுகருக்கு தெரிந்து, ரியாக் ஷன் வந்ததும் ராமதாசுக்கு சந்தேகம் வலுத்துள்ளது.
இதன் தொடர்ச்சியாகவே தனியார் துப்புறியும் ஏஜென்சியை தைலாபுரம் தோட்டத்திற்கு அழைத்து, ஆய்வு செய்ததில் ஒட்டு கேட்கும் கருவி பொருத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த ஒட்டு கேட்கும் கருவி, முழுக்க முழுக்க சேட்டிலைட் மூலம் இயங்கும் தன்மை உடையது. இந்தக் கருவி, யார் பேசினாலும் உடனே, 'ஆன்' ஆகிவிடும். எதிர்தரப்பில் உள்ள ரிசீவர் மூலம் ஆட்டோமேட்டிக்காக கம்ப்யூட்டரில் பதிவாகி விடும்.
எதிர்தரப்பின் பதிவுகளை கம்ப்யூட்டர் மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வசதி உள்ளது குறித்து, நிபுணர் குழுவினர், ராமதாசிடம் தெரிவித்துள்ளனர்.
ஒட்டு கேட்கும் கருவியை கண்டுபிடித்த விவகாரம் வெளிவந்துள்ளதால், அக்கருவியை தோட்டத்தில் பொருத்தியவர்கள் உஷராகி, சிம் கார்டில் பதிவான ஆதாரங்களை அழிப்பதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் அக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஒட்டு கேட்கும் கருவி குறித்து ஆய்வு செய்துள்ள தனியார் துப்புறியும் ஏஜென்சியினர், கண்டறியப்பட்ட தடயங்கள் குறித்த அறிக்கையை அடுத்த சில நாட்களில் ராமதாசிடம் வழங்க உள்ளனர்.
அதன் அடிப்படையில், சென்னையில் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிப்பதா அல்லது மத்திய அரசின் அமைப்பான பெங்களூரில் உள்ள ராணுவ உளவுப்பிரிவிடம் புகார் அளிப்பதா என, பா.ம.க., நிறுவனர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
தைலாபுரத்தில் கண்டறியப்பட்ட ஒட்டு கேட்கும் கருவி, இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவினர் பயன்படுத்துவது போல், உயரிய தொழில்நுட்ப வசதியுடையது என கூறப்படுகிறது.
ஒட்டு கேட்கும் கருவியை வைத்ததின் பின்னணியில் உள்ளவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று, ராமதாஸ் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.