58 கிராம கால்வாய் தொட்டிப்பாலம் அருகே தோட்டாக்களை வெடித்து நிபுணர்கள் ஆய்வு
58 கிராம கால்வாய் தொட்டிப்பாலம் அருகே தோட்டாக்களை வெடித்து நிபுணர்கள் ஆய்வு
ADDED : டிச 07, 2024 02:50 AM

வத்தலக்குண்டு: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 58 கிராம கால்வாய் திட்டத்தில் தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் வழியாக உத்தப்பநாயக்கனுார் வரை 27 கி.மீ.,க்கு பிரதான கால்வாய் உள்ளது. இக்கால்வாயில் சந்தையூர், ரெங்கப்பநாயக்கன்பட்டி பகுதிகளில் 1400, 1250 மீ., உயரத்துக்கு தொட்டிப்பாலங்கள் உள்ளன.
சந்தையூர் தொட்டிப்பாலம் அருகில் 1.58 எக்டேரில் உடைகல், சக்கை, ஜல்கற்கள் எடுக்க குவாரிக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.
அருகில் நீர்வழிப்பாதையான தொட்டிப்பாலம் இருந்தும் குவாரி செயல்பட பொதுப்பணி, சுற்றுச்சூழல், வருவாய் உள்ளிட்ட அரசுத்துறையினர் தடையில்லா சான்று வழங்கியது இப்பகுதி விவசாயிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இப்பகுதியில் வெடி வைத்து கற்களை தோண்டும் போது பாலத்தில் அதிர்வு ஏற்பட்டு பாதிப்பு உருவாகும் என விருவீடு, உசிலம்பட்டி பகுதி பாசன விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர். இதனால் குவாரி அருகில் கற்களை உடைக்கும் கிரஷர் இயந்திரம் செயல்பட தடை விதிக்கப்பட்டது.
குவாரி அனுமதி பெற்ற ஒப்பந்தகாரர் இப்பகுதியில் தோட்டா உள்ளிட்ட வெடிகளை வெடிப்பதால் தொட்டிப்பாலத்திற்கு பாதிப்பு ஏற்படாது என நீதிமன்றத்தில் முறையிட்டார். இதுகுறித்து நிபுணர்கள் கொண்டு ஆய்வு செய்யவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி டிச.,4 முதல் சென்னை அண்ணா பல்கலை புவியியல், சுரங்கவியல் துறை தலைவர் பால மாதேஸ்வரன் தலைமையில் துணைப்பேராசிரியர் குமார் கொண்ட குழுவினர் பல்வேறு இடங்களில் தோட்டாக்களை வெடித்து சோதனை நடத்தினர்.
நேற்று நான்கு இடங்களில் குறைந்தது 14 முதல் 30 குழிகளில் தோட்டாக்களை கொண்டு வெடித்து சோதனை நடத்தினர். தோட்டாக்கள் வெடிக்கும் போது ஏற்படும் அதிர்வுகளை அதற்கான கருவிகள் கொண்டு பதிவு செய்தனர். சோதனை முடிந்தபின் அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.