சுரண்டப்படும் கதிரேசன் கோவில் மலை: ஆய்வு நடத்தி அறிக்கை தர தீர்ப்பாயம் உத்தரவு
சுரண்டப்படும் கதிரேசன் கோவில் மலை: ஆய்வு நடத்தி அறிக்கை தர தீர்ப்பாயம் உத்தரவு
UPDATED : அக் 09, 2024 06:59 AM
ADDED : அக் 08, 2024 10:31 PM

சென்னை: துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கதிரேசன் கோவில் மலையில் சரளைமண், கற்கள் எடுக்கப்படுவது குறித்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு, தமிழக சுற்றுச்சூழல், சுரங்கம், அறநிலையத்துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அமைந்துள்ள கதிரேசன் மலை உச்சியில், சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவில் உள்ளது. இக்கோவில் மற்றும் கோவிலைச் சுற்றியுள்ள நிலங்கள், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளன. அந்த இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இந்த மலைக்குன்றில் இருந்து சரளைமண், கற்கள் எடுக்கப்பட்டு, லாரிகளில் கடத்திச் செல்லப்படுகின்றன. இதனால், கதிரேசன் கோவில் மலைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக, கடந்த மாதம் 30ல், நம் நாளிதழில் செய்தி வெளியானது.
அதன் அடிப்படையில், தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
கதிரேசன் கோவில் மலைக்குன்றில் மண், கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு மலை சுரண்டப்படுவதாக, 'தினமலர்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால், அங்குள்ள சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவிலுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விரிவாக ஆய்வு நடத்தி, தமிழக சுற்றுச்சூழல், வருவாய்த் துறை செயலர்கள், புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குனர், ஹிந்து சமய அறநிலையத் துறை ஆணையர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை, நவம்பர் 4ல் நடக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

