UPDATED : செப் 26, 2024 07:49 AM
ADDED : செப் 26, 2024 03:01 AM

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசி சிவகாமிபுரம்காலனியில் உள்ள மேட்டூர் டிரான்ஸ்போர்ட் லாரி கோடவுனில் ஏற்பட்ட வெடி விபத்தில் ரூ.பல லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து சேதமாயின.
சிவகாசியில் சாத்துார் ரோடு சிவகாமிபுரம் காலனி கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் அருகே மேட்டூர் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் உள்ளது. இங்கிருந்து வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பட்டாசுப்பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது.
தற்போது தீபாவளி நெருங்குவதால் அதிக அளவிலான பட்டாசுகள் வெளி மாநிலங்கள், வெளியூர்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. நேற்று மாலை 6:00 மணியளவில் லோடு வேனில் கொண்டு வந்த பட்டாசுகளை இறக்கிய போது உராய்வு காரணமாக கம்பி மத்தாப்பு பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது.
பிற பட்டாசு பெட்டிகளுக்கும் தீ பரவி அனைத்து பட்டாசுகளும் வெடிக்க துவங்கின. 100 மீட்டர் உயரத்திற்கு மேல் புகை எழுந்து அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. தீயணைப்பு துறையினரின் 3 தீயணைப்பு வாகனங்கள் உதவியுடன் தீயை அணைக்கும் பணி நடந்தது. தொடர்ந்து பட்டாசுகள் வெடித்துக் கொண்டே இருந்ததால் தீயை அணைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதில் ரூ. பல லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து வீணாயின. ஏ.டி.எஸ்.பி., சூரிய மூர்த்தி, டி.எஸ்.பி., பாஸ்கர் சம்பவயிடத்தை பார்வையிட்டனர். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
மூன்று தீயணைப்பு வாகனங்கள் வந்தும் தொடர்ந்து பட்டாசு வெடித்துக் கொண்டே இருந்ததால் தண்ணீர் பற்றாமல் தனியார் நிறுவனத்தின் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீ அணைக்கப்பட்டது.
* வெடி விபத்து ஏற்பட்டவுடன் பட்டாசு இறக்கி கொண்டிருந்தவர்கள், ஊழியர்கள் உடனடியாக தப்பி ஓடினர். இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திலிருந்து 50 மீட்டர் துாரத்திற்கு பட்டாசுகள் வெடித்து சிதறின. போலீஸ் ஸ்டேஷன் எதிரே வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அப்பகுதியில் தீ பிடித்த நிலையில் தீயணைப்பு வாகனம் வருவதற்கு முன்பாகவே போலீசார் சுதாரித்து ஸ்டேஷனில் இருந்த தண்ணீரை ஊற்றி அணைத்தனர். தவிர அருகில் உள்ள புற்களிலும் தீப்பிடித்து எரிந்தது.
தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்துக் கொண்டிருந்த போதும் பட்டாசு வெடித்து சிதறி கொண்டே இருந்தது. சிதறிய பட்டாசுகள் ஸ்டேஷனுக்கு முன்பிருந்த கட்டடத்தால் தடுக்கப்பட்டதால் ஸ்டேஷன் வளாகத்தில் பட்டாசு விழவில்லை.