ADDED : டிச 31, 2025 06:41 AM

சென்னை : தமிழகத்தில், மின்சார வாகனங்களுக்கான, 100 சதவீத சாலை வரி விலக்கு, மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத, பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க, மத்திய - மாநில அரசுகள், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில், தமிழக அரசு, 2019ம் ஆண்டு, தமிழக மின்சார வாகன கொள்கையை வெளியிட்டது.
மின்சார வாகனங்களின் விற்பனையை அதிகரிக்க, 2022 டிச., 31ம் தேதி வரை, 100 சதவீதம் சாலை வரி விலக்கு அளிக்கப்பட்டது. அதன்பின், 2025 டிசம்பர், 31 தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.
அந்த அவகாசம் இன்று முடிவடையும் நிலையில், சலுகையை நீட்டிக்க வேண்டும் என, வாகன உற்பத்தியாளர்கள், அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
அதை ஏற்று, மின்சார வாகனங்களுக்கான, 100 சதவீதம் சாலை வரி விலக்கு, 2027 டிசம்பர், 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை, உள்துறை செயலர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ளார்.

