வயதை மாற்றி போலி ஆதார் தயாரிப்பு; திருப்பூரில் ஜார்க்கண்ட் சிறுமியர் மீட்பு
வயதை மாற்றி போலி ஆதார் தயாரிப்பு; திருப்பூரில் ஜார்க்கண்ட் சிறுமியர் மீட்பு
ADDED : மார் 11, 2025 07:40 AM

திருப்பூர்: போலி ஆதார் தயாரித்து, ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து, திருப்பூருக்கு குழந்தை தொழிலாளராக பணிபுரிய அனுப்பப்பட்ட ஐந்து சிறுமியர், ரயில்வே ஸ்டேஷனில் மீட்கப்பட்டனர்.
கேரளா செல்லும் ரயிலில், கடந்த 6ம் தேதி பயணித்த, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து சிறுமியர், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கினர். ரயில்வே போலீசார், சிறுமியரின் ஆதார் கார்டை பரிசோதித்ததில், 18 வயது பூர்த்தியானது போன்று பிறந்த தேதி குறிப்பிடப்பட்டிருந்தது. ஆதார் கார்டு க்யூ.ஆர்., கோர்டை ஸ்கேன் செய்தபோது, ஸ்கேன் ஆகவில்லை.
இது குறித்து, ரயில்வே போலீசாரின் தகவல்படி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள், ஐந்து சிறுமியரிடம் விசாரணை நடத்தினர். அதில், ஐந்து பேரின் உண்மையான வயது 16 என்பதும், போலி ஆதார் கார்டு வாயிலாக திருப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டதும் தெரியவந்தது.
தொடர்ந்து, ஜார்க்கண்டில் இருந்து சிறுமியரின் பெற்றோர், நேற்று திருப்பூர் வரவழைக்கப்பட்டு, கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் ஆறுச்சாமி கூறியதாவது:
குறிப்பாக, 14 வயதுக்கு உட்பட்டவர்களை நிறுவனங்களில் பணி அமர்த்தக்கூடாது. 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டோரை பணி அமர்த்துவதில் ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளன. இதற்காகவே, வெளி மாநிலங்களிலிருந்து வரும் தொழிலாளர்களை, 18 வயது பூர்த்தியானது போன்று ஆதாரில் மாற்றம் செய்து அனுப்புகின்றனர்.
ஜார்க்கண்டிலிருந்து திருப்பூரில் பணிபுரிவதற்காக அனுப்பப்பட்ட ஐந்து சிறுமியரையும் விசாரணை முடிந்த பின் பெற்றோருடன், சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.