தி.மு.க., -அ.தி.மு.க., இடையே கள்ள கூட்டணி: சொல்கிறார் தினகரன்
தி.மு.க., -அ.தி.மு.க., இடையே கள்ள கூட்டணி: சொல்கிறார் தினகரன்
ADDED : மார் 30, 2024 09:20 AM

அலங்காநல்லுார்: ''பழனிசாமி ஆட்சியில் நடந்த ஊழல் குற்றச்சாட்டுகள் மீது கைது நடவடிக்கை எடுக்காமல் இருக்க தி.மு.க., - அ.தி.மு.க., இடையே கள்ள கூட்டணி உள்ளது. மோடி 3வது முறை பிரதமர் ஆவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது'' என தேனி தொகுதிக்குப்பட்ட மதுரை மாவட்டம் அலங்காநல்லுாரில் அ.ம.மு.க வேட்பாளர் தினகரன் தெரிவித்தார்.
அலங்காநல்லுாரில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தினகரன் பேசியதாவது: சிலிண்டருக்கு ரூ.100 குறைப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியதை செய்யவில்லை. தற்போது மீண்டும் மக்களை ஏமாற்ற விலையை குறைப்பேன் என்கிறார். 50 சதவீதம் பெண்களுக்கு கூட உரிமைத் தொகை தரவில்லை. தி.மு.க., எப்போதும் தவறாக, மட்டமாக பேசும் கட்சி என எல்லோருக்கும் தெரியும். நாங்கள் திருந்த மாட்டோம் என்பதை அவ்வப்போது பறைசாற்றி வருகின்றனர். இது தேர்தலில் எதிரொலிக்கும்.
1998ல் பா.ஜ., உடன் ஜெயலலிதா கூட்டணி வைத்தபோது பண்டாரம் பரதேசி உடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என ஸ்டாலினின் தந்தை கருணாநிதி பேசினார். பின் 1999ல் அவரே பா.ஜ., உடன் கூட்டணி வைத்தார். மோடி 10 ஆண்டுகள் சிறப்பான ஊழலற்ற ஆட்சி நடத்தி வருகிறார் என்பதை யாரும் மறுக்க முடியாது.
தி.மு.க., எனும் தீய சக்தியை தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருந்து இறக்க, துரோக சக்தியான பழனிசாமி கம்பெனியை ஒழிக்க தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.ம.மு.க., அங்கம் வகிப்பதுதான் மக்கள் மற்றும் எங்கள் நலன் சார்ந்தது. பழனிசாமி ஆட்சியில் நடந்த ஊழல் குற்றச்சாட்டுகள் மீது கைது நடவடிக்கை எடுக்காமல் இருக்க தி.மு.க., -- அ.தி.மு.க., இடையே கள்ள கூட்டணி உள்ளது. இவ்வாறு பேசினார்.

