உலகை அச்சுறுத்தும் ஆபத்தாக மாறும் பொய் செய்திகள்: உதயநிதி
உலகை அச்சுறுத்தும் ஆபத்தாக மாறும் பொய் செய்திகள்: உதயநிதி
ADDED : செப் 04, 2025 04:13 AM

சென்னை: ''பிறப்பால் யாரும் உயர்ந்தவர், தாழ்ந்தவர் கிடையாது. பிறப்பால் ஏற்றத்தாழ்வு கிடையாது. அப்படி ஒன்று இருந்தால், அதை ஒழிக்க வேண்டும் என, மூன்று ஆண்டுகளுக்கு முன் பேசினேன். அதை திரித்து, இனப் படுகொலைக்கு துாண்டுவதாக பொய் செய்தி பரப்பினர். அதற்காக, என் தலைக்கு விலை பேசினர்,'' என, துணை முதல்வர் உதயநிதி பேசினார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் கீழ் செயல்படும் என்.எஸ்.எஸ்., எனும் நாட்டு நலப்பணி திட்ட அமைப்பு சார்பில், சமூக ஊடக சவால்களை எதிர்கொள்வது குறித்து, மூன்று நாள் மாநில பயிற்சி பட்டறை நடந்தது.
அதில், வெற்றி பெற்ற மாணவ -- மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் விழா, சென்னையில் நேற்று நடந்தது. அதில், உதயநிதி பேசியதாவது:
இன்றைய இளம் தலைமுறையினர், சமூக வலைதளத்தில் மூழ்கி உள்ளனர். சமூக வலைதளங்களில் தற்போது அதிக பொய் செய்திகளையும், வதந்திகளையும் பரப்புகின்றனர். உண்மை செய்தி பரவும் வேகத்தை விட, பொய் செய்தி மூன்று மடங்கு வேகத்தில் பரவுகிறது.
இந்தியாவில் உள்ள பாசிச கும்பல், பொய் செய்திகள் பரப்புவதை அடிப்படை கொள்கையாக கொண்டுள்ளது; அதையே முழு நேர வேலையாக செய்கிறது. பொய் செய்தி வாயிலாக மக்களை குழப்ப வேண்டும் என்பதை நோக்கமாக வைத்து, கட்டுக்கதைகளை பரப்புகிறது.
வதந்திகளில் இரண்டு வகை உள்ளது. 'மிஸ்இன்பர்மேஷன், டிஸ்இன்பர்மேஷன்' என்ற இரண்டும் உலக அளவில் பெரிய ஆபத்தாக உள்ளன. 'மிஸ்இன்பர்மேஷன்' என்பது உள்நோக்கம் இல்லாமல் பரவும் செய்தி. ஆனால், 'டிஸ்இன்பர்மேஷன்' என்பது திட்டமிட்டு பரப்பப்படும் பொய் செய்தி. இந்த டிஸ்இன்பர்மேஷன் மிக ஆபத்தானது. இன்னும் இரண்டு ஆண்டுகளில், இந்த இரண்டும் உலகை அச்சுறுத்தும் ஆபத்தாக மாறும்.
தமிழகத்தில் உண்மை சரிபார்க்கும் குழுவினர் சிறப்பாக பணியாற்றுகின்றனர். அதனால், போலி செய்தி பரப்பக்கூடிய கும்பல் பதற்றம் அடைந்துள்ளது. கடந்த ஆண்டை விட தற்போது போலி செய்தி பரவல் குறைந்துள்ளது; அதை அடியோடு நிறுத்த வேண்டும்.
சமூக வலைதளத்தில், 'எது ரீல்; எது ரியல்' என்பதை, நீங்கள் தான் மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும். களத்தில் நின்று, போர் வீரர்களாக செயலாற்ற வேண்டும். பொய் செய்தியற்ற சமூகத்தை உருவாக்குவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
நான் பேசாத பேச்சை வதந்தியாக பரப்பினர் தவறான செய்திகள் போல் வெறுப்பு பேச்சும் அதிகமாகி உள்ளது. குறிப்பாக சிறுபான்மையின மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், வெறுப்பு பேச்சுகளால் பாதிக்கப்படுவது அதிகமாகி உள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன், 'பிறப்பால் யாரும் உயர்ந்தவர், தாழ்ந்தவர் கிடையாது. பிறப்பால் ஏற்றத்தாழ்வு கிடையாது. அப்படி ஒன்று இருந்ததால், அதை ஒழிக்க வேண்டும்' என நான் பேசினேன். அதையும் திரித்து, இனப் படுகொலைக்கு துாண்டுவதாக பொய் செய்தி பரப்பினர். என் பேச்சை திரித்து, நான் சொல்லாத விஷயத்தை கூறி, ஒரு கும்பல் நாடு முழுதும் வதந்தியை பரப்பியது. இந்த விவகாரத்தில், என் தலைக்கு விலை பேசினர். மற்ற மாநிலங்களை போல், தமிழகம் எதையும் உடனே நம்பாது என்பதற்கு மாணவர்களே சாட்சி. வதந்தி செய்திகள் குறித்து மக்களுக்கு, மாணவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். உதயநிதி, துணை முதல்வர்

