ADDED : ஜன 09, 2024 12:33 AM

சென்னை: சென்னையில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், ஏ.ஐ., எனப்படும், செயற்கை நுண்ணறிவு மற்றும் 'டீப் பேக்' தொழில்நுட்பத்தால் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்த கலந்துரையாடலில், தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தியாகராஜன் பேசியதாவது:
உலகையே மாற்றிக் கொண்டிருக்கும், ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, 100 பேர் செய்யக்கூடிய வேலையை ஒருவரால் செய்ய முடியும். இதனால், பலர் வேலை இழக்கும் சூழல் உருவாகும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
அதேநேரத்தில், ஏ.ஐ., தொழில்நுட்பத்தால், புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். ஏ.ஐ., தொழில்நுட்பம் வாயிலாக, பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண, தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது.
அதன் வாயிலாக, புதிய தொழில்களை துவங்குவதற்கான சூழலை, தமிழக அரசு ஏற்படுத்தி வருகிறது. ஏ.ஐ., உள்ளிட்ட தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதில், மற்ற மாநிலங்களை விட, தமிழகம் முன்னணியில் உள்ளது.
'டீப் பேக்' தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, சமூக ஊடகங்களில் ஏராளமான போலி செய்திகள் பரப்பப்படுகின்றன. இது, ஜனநாயகத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.
எந்த ஒரு செய்தி கிடைத்தாலும், அது உண்மை தானா, செய்தி எங்கிருந்து வந்தது என்பதை உறுதி செய்த பின்னரே, அதை நம்ப வேண்டும்; மற்றவர்களுக்கு பகிர வேண்டும். இல்லையெனில், சமூகத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.
தரவுகளை திரட்டுவதில், ஏ.ஐ., தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. தொழில்முனைவோருக்கான தரவுகளை, தமிழில் அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.