" திமுக.,விற்கு எதிராக பொய் பிரசாரம்" - சொல்கிறார் அமைச்சர் ரகுபதி
" திமுக.,விற்கு எதிராக பொய் பிரசாரம்" - சொல்கிறார் அமைச்சர் ரகுபதி
UPDATED : மார் 10, 2024 01:02 PM
ADDED : மார் 10, 2024 12:41 PM

சென்னை: ‛‛ போதைப்பொருள் விவகாரத்தில், தி.மு.க.,வை கொச்சைப்படுத்தி, அசிங்கப்படுத்தி அரசியல் லாபம் அடைய முடியுமா என தப்புக்கணக்கு போடுவதாக '' சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.
சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தி.மு.க.,வை களங்கப்படுத்த பா.ஜ., செய்யும் அரசியல் தமிழகத்திலும், இந்திய அளவிலும் எடுபடாது. ‛ இண்டியா' கூட்டணியை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்த தி.மு.க.,வை தேர்தல் களத்தில் களங்கப்படுத்தி அரசியல் ஆதாயம் பெற்று விடலாம் பா.ஜ., தப்புக் கணக்கு போட்டு கொண்டுள்ளது. அதற்கு துணையாக அதிமுக துதிபாடிக் கொண்டு உள்ளது.
முன்பு, வருமான வரித்துறை, சி.பி.ஐ., அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை வரிசையாக களமிறக்கிய பா.ஜ., அரசு, இன்று தி.மு.க., அரசை களங்கப்படுத்த போதைப்பொருள்தடுப்பு பிரிவு (என்சிபி)யை களமிறக்கி உள்ளது. தி.மு.க.,வை என்சிபியை வைத்து மிரட்டி பார்க்கலாம் என எண்ணுகிறார்கள்.
தமிழக அரசியலில், அதிமுக ஆட்சியில் குட்கா வியாபாரிகளுக்கு அமைச்சர்கள்துணையாக இருந்தனர். முன்னாள் விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து ஒரு பேப்பர் எடுக்கப்படுகிறது. அதில் ரூ.85 கோடி எந்தெந்த அமைச்சர்களுக்கு தரப்பட்டது என்ற விபரம் உள்ளது. அதில் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஜாபருடன் தொடர்பு இல்லை
ஜாபர் சாதிக் மீது பிப்.,15ல் ‛லுக் அவுட்' நோட்டீஸ் பிறப்பித்தோம். தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தோம் என சொல்லி உள்ளனர். ஆனால், 21ம் தேதி ‛மங்கை' என்ற பட விழாவில் அவர் கலந்து கொண்டுள்ளார். அப்போது என்சிபி எங்கே போனது.? 2013ல் அவர் மீது ஒரு வழக்கு வந்தது. அதிமுக ஆட்சியில் ஒழுங்காக வழக்கை நடத்தவில்லை. அன்றைக்கு வழக்கை நடத்தியவர் பா.ஜ., வழக்கறிஞர் அணி தலைவராக இருக்கும் பால் கனகராஜ். அன்றைக்கு ஜாபர் சாதிக்கை காப்பாற்றியது அதிமுக ஆட்சி.
குஜராத், உத்தர பிரதேசம், மஹாராஷ்டிராவில் தான் அதிக வழக்குகள் போடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ஏதாவது பிடிபட்டதா? கஞ்சா உற்பத்தி இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளது. ஜாபர் சாதிக் குறித்து விவரம் தெரிந்ததும் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ஜாபர் சாதிக்கிற்கும் தி.மு.க.,விற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. இவ்வாறு ரகுபதி கூறினார்.

