விசாரணைக்கைதி உயிரிழப்பு; சிவகங்கை எஸ்.பி., மாற்றம்: மானாமதுரை டி.எஸ்.பி., சஸ்பெண்ட்
விசாரணைக்கைதி உயிரிழப்பு; சிவகங்கை எஸ்.பி., மாற்றம்: மானாமதுரை டி.எஸ்.பி., சஸ்பெண்ட்
UPDATED : ஜூலை 01, 2025 02:59 PM
ADDED : ஜூலை 01, 2025 11:26 AM

சிவகங்கை: திருப்புவனம் அஜித் குமார், போலீஸ் விசாரணையில் உயிரிழந்ததை தொடர்ந்து, சிவகங்கை மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் விசாரணை கைதி அஜித் குமார் உயிரிழந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட திருப்புவனம் குற்றப்பிரிவு போலீசார் பிரபு, ஆனந்தன், கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, சிவகங்கை மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி., சந்தீஷ், சிவகங்கை மாவட்டத்துக்கு கூடுதல் பொறுப்பு வகிப்பார் என அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கைது செய்யப்பட்ட போலீசாரின் குடும்பத்தினர், திருப்புவனம் போலீஸ் ஸ்டேசன் முன் இன்று காலை குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் உயர் அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர்.
கட்டடத்தில் மோதிய போலீஸ் வேன்
இதற்கிடையே, கைதி உயிரிழந்த சம்பவத்தில் குற்றப்பிரிவு போலீசார் பிரபு, ஆனந்தன், சங்கர மணிகண்டன், ராஜா, கண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு திருப்புவனம் மாஜிஸ்டிரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.
போலீசாரை ஏற்றி செல்ல கோர்ட் வளாகத்திற்குள் டெம்போ டிராவலர் வேன் செல்லும் போது சுவற்றில் இருந்த சிமெண்ட் சிலாப்பில் மோதி நின்றது. பின்னர் மீண்டும் வெளியே சிரமப்பட்டு டெம்போ டிராவலர் வேனை மீட்டனர்.
மானாமதுரை டி.எஸ்.பி., சஸ்பெண்ட்
இந்த விவகாரத்தில் மானாமதுரை டி.எஸ்.பி., சண்முகசுந்தரத்தை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.