போதை வியாபாரிகளுடன் தொடர்பு பிரபல நடிகர் மகனிடம் விசாரணை
போதை வியாபாரிகளுடன் தொடர்பு பிரபல நடிகர் மகனிடம் விசாரணை
ADDED : டிச 03, 2024 11:40 PM

சென்னை:சென்னை ஜெ.ஜெ நகரில் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட, அதே பகுதியை சேர்ந்த கல்லுாரி மாணவரான கார்த்திகேயன், 21, என்பவரை கடந்த மாதம் 3ம் தேதி போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து, 17 'எல்.எஸ்.டி ஸ்டாம்ப்' என்ற போதை பொருளும், 3 கிராம் ஓ.ஜி., கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில், 'ரெடிட்' ஆன்லைன் செயலி வாயிலாக போதைப்பொருள் வாங்கி பயன்படுத்தி வந்ததுடன், அதிக விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.
அவர் அளித்த தகவலின்படி, சென்னை மந்தைவெளியை சேர்ந்த அரவிந்த் பாலாஜி, 20, கூடுவாஞ்சேரியை சேர்ந்த வத்சல், 21, மறைமலைநகரை சேர்ந்த திரிசண் சம்பத், 20, ஆருணி, 20, ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து, 94 எல்.எஸ்.டி., ஸ்டாம்ப், 48 எம்.டி.எம்.ஏ., போதை மாத்திரை, 700 கிராம் ஓ.ஜி., கஞ்சா, ஐந்து மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக், 24, அவரது நண்பர்கள் ஏழு பேரை, துணை கமிஷனர் தலைமையிலான தனிப்படை போலீசார், ஜெ.ஜெ நகர் காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை செய்தனர்.
அதில், அலிகான் துக்ளக், கார்த்திகேயனிடமிருந்து ஓ.ஜி., கஞ்சா போன்ற போதை பொருட்களை வாங்கி பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அலிகான் துக்ளக் போதை பொருள் பயன்படுத்தியது உறுதியானால், கைது செய்யப்படலாம் என்று போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
மன்சூர் அலிகான் இயக்கி, 2019ல் வெளியான, கடமான்பாறை படத்தில், அலிகான் துக்ளக் கதாநாயகனாக நடித்துள்ளது குறிப்பிடதக்கது.