ADDED : நவ 11, 2024 04:23 AM

மதுரை : பிரபல எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன், 66, மதுரையில் நேற்று காலமானார்.
சேலத்தைச் சேர்ந்த இவர், 40 ஆண்டுகளுக்கும் மேலாக மதுரை டி.வி.எஸ்., நகரில் வசித்து வந்தார். உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்றவர், நேற்று வீட்டில் குளியலறைக்கு சென்றபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இவரது உடலுக்கு ஏராளமான கலை, இலக்கிய உலக பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இவரது இயற்பெயர் சவுந்தரராஜன். தாய் மீது கொண்ட அன்பால், இந்திரா என்ற தாயின் பெயரையும் சேர்த்து, இந்திரா சவுந்தரராஜன் என்ற பெயரில் எழுத்துலகில் பயணித்தார்.
ஹிந்து மத, பாரம்பரிய, புராண, இதிகாசம் கலந்து எழுதுவதில் வல்லவரான இவர், எங்கே என் கண்ணன், நீலக்கல் மோதிரம் உட்பட 700 சிறுகதைகளை எழுதியுள்ளார்.
மேலும், தாமரை பிரதர்ஸ் வெளியீடுகளான, 'தெரிந்த பாரதம், தெரியாத பாத்திரம், கிருஷ்ண ஜாலம்' உட்பட 340 நாவல்கள், 'என் பெயர் ரங்கநாயகி, ருத்ரவீணை, மர்மதேசம்' உட்பட, 105, 'டிவி' தொடர்களையும் எழுதிஉள்ளார்.
'ஆனந்தபுரத்து வீடு, இருட்டு, சிருங்காரம்' போன்ற படங்களுக்கு, திரை கதைகளை எழுதியுள்ளார். சிறந்த சிறுகதை எழுத்தாளர் விருது, மயிலாப்பூர் அகாடமி விருது, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா விருது என பல விருதுகளை பெற்றுள்ளார்.
தன் பயண அனுபவங்களை, 'யாத்திரை ஞானம், யாத்திரை அனுபவங்கள்' என்ற பெயர்களில் வெளியிட்டுள்ளார்.
காஞ்சி ஸ்ரீமகா பெரியவர் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டு பக்தி சொற்பொழிவாற்றி வந்தார். ஹிந்துமத ஆன்மிக நெறி குறித்து நிறைய ஆய்வுகளை செய்தும், எழுதியும், பேசியும் வந்தார்.
இவருக்கு, ராதா என்ற மனைவி, திருமணமான மகள் ஐஸ்வர்யா மற்றும் ஸ்ரீநிதி என்ற மகள் உள்ளனர்.
இன்று காலை, 10:00 மணிக்கு சத்யசாய் நகர் 4வது குறுக்குத் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி சடங்குகள் நடைபெறும்.