ADDED : ஆக 31, 2025 06:42 AM

சென்னை: வாகனங்களுக்கான 'பேன்சி' எண்களை, ஏல முறையில் ஒதுக்கீடு செய்யும் புதிய நடைமுறையை, தமிழக அரசு அமல்படுத்த உள்ளது. இது தொடர்பாக வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அனைத்து விதமான வாகனங்களுக்கும், அந்தந்த பகுதியில் உள்ள, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், பதிவு எண் வழங்கப்படுகிறது. வாகன ஓட்டிகள் தாங்கள் விரும்பும் பதிவெண்களை வாங்க, தனி கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்நிலையில், வாகனங்களுக்கான பேன்சி எண்களை, ஏல முறையில் ஒதுக்கீடு செய்யும் வகையில், புதிய நடைமுறையை தமிழக அரசு கொண்டு வர உள்ளது. இதற்காக மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்து, புதிய வரைவு விதிகளை தமிழக அரசு அரசிதழில், கடந்த 18ம் தேதி வெளியிட்டுள்ளது.
அதன்படி, இனி அதிக தேவை உள்ள எண்களுக்கு, 'ஆன்லைன்' முறையில் ஏலம் விடப்படும். இதற்கான நுழைவுக் கட்டணம், 1,000 ரூபாய்.
பேன்சி எண் பெற விரும்புவோர், https://fancy.parivahan.gov.in இணையதளத்தில் பதிவு செய்து, எண்களை தேர்வு செய்ய வேண்டும். ஏலத்தில் வெற்றி பெற்றோர், 48 மணி நேரத்திற்குள் பணத்தை செலுத்த வேண்டும்.
இவ்வாறு அரசு தெரிவித்துள்ளது.

