ADDED : ஜன 26, 2025 05:42 AM
விழுப்புரம் : விவசாயிக்கு ரூ.2 லட்சம் கடன் தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
திண்டிவனம் அடுத்த ரெட்டணை கிராமத்தை சேர்ந்தவர் விஜய்,45; இவரை கடந்த டிச. 6ம் தேதி மொபைல் போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், தனியார் நிதி நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும், கடன் தேவைப்பட்டால், ஆதார், பான் உள்ளிட்ட ஆவணங்களை அனுப்பி வைக்க கூறினார்.
அதனை நம்பிய விஜய் தனது பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை அனுப்பி வைத்தார். தொடர்ந்து அந்த நபர் ரூ.2 லட்சம் கடன் தருவதாகவும், பணத்தை வங்கி கணக்கில் செலுத்த, தயாரிப்பு கட்டணம், ஜி.எஸ்.டி., கட்டணம் செலுத்த வேண்டும் எனக்கூறி ரூ.25 ஆயிரத்து 600யை விஜயிடம் ஆன்லைனில் பெற்றார்.
பின்னர் 17 தவணைகளில் ரூ.4 லட்சத்து 30 ஆயிரத்து 420 பணத்தை விஜய் செலுத்தி உள்ளார். ஆனால் கடன் தொகை வழங்காமல், மர்ம நபர் மேலும் பணம் கேட்டார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த விஜய் விழுப்புரம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.