ADDED : செப் 28, 2024 07:21 PM
சென்னை:தனி நபரின் நில பறிப்புக்கு ஆதரவாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் செயல்பட்டதால், விவசாயி தற்கொலை செய்து கொண்டதாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த கெங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மோகன்ராஜ், தமது நிலத்தை பறிக்க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவுடன் நடந்த முயற்சிகளால் மனம் உடைந்து, மேல்மலையனூர் தாசில்தார் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
மக்களுக்காக போராடுவதாகக் கூறிக் கொள்ளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், தனி நபர் ஒருவரின் நிலப்பறிப்புக்கு ஆதரவாக களமிறங்கி, 33 வயது ஏழை விவசாயி தற்கொலைக்கு காரணமாகியிருப்பது கண்டிக்கத்தக்கது.
அவரது தற்கொலைக்கு காரணமான 23 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, கைது செய்ய வேண்டும். மோகன்ராஜின் குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.