விஷமாகும் கல்லணை கால்வாய் தண்ணீர்; பயிர் பாதிக்கும் என விவசாயிகள் வேதனை
விஷமாகும் கல்லணை கால்வாய் தண்ணீர்; பயிர் பாதிக்கும் என விவசாயிகள் வேதனை
UPDATED : பிப் 18, 2024 04:44 AM
ADDED : பிப் 18, 2024 04:42 AM

தஞ்சாவூர் : மேட்டூர் அணை கட்டப்பட்ட போது, தஞ்சாவூர் மாவட்டத்தில், வானம் பார்த்த பூமிகளான ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர், அதிராம்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி உள்ளிட்ட ஊர்களில் சுமார் 2.50 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் இருந்தன.
இதற்கு பாசன வசதிக்காக கல்லணை தலைப்பில் இருந்து, புதுக்கோட்டை மாவட்டம், மும்பாலை வரை, 149 கி.மீ., துாரத்திற்கு கல்லணை கால்வாய் வெட்டப்பட்டது. கடந்த, 1934ம் ஆண்டு ஆக., 28ம் தேதி, விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கால்வாய் கொண்டு வரப்பட்டது.
![]() |
இந்த கால்வாயில் எங்குமே கழிவுநீரும், காட்டாற்று தண்ணீரும் கலக்க முடியாத வகையில் ஆற்றின் குறுக்கே, 'சைபன்' எனப்படும் கீழ்குமிழிகள், மேல்நிலை கால்வாய்கள், பெருவெள்ளக் காலங்களில் காட்டாற்று தண்ணீரை உள்வாங்கி வெளியேற்ற நீர்வழிப்பாதைகள், தண்ணீரின் விசையை சீராக வைத்துக் கொள்ள 505 இடங்களில் 'டிராப்' எனப்படும் நீரொழுங்கிகள் அமைக்கப்பட்டன.
இருப்பினும், தஞ்சாவூர் நகர் பகுதியை கல்லணை கால்வாய் கடக்கும், 15 கி.மீ., துாரத்திற்கு, கால்வாயின் இருபுறமும் உள்ள குடியிருப்புகள், அலுவலகங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கலந்து, தண்ணீர் மாசடைந்து காணப்படுகிறது.
மேலும், விவசாய நிலத்திற்கு செல்லும் தண்ணீர் ரசாயனம் கலந்தது போல இருப்பதால், சில இடங்களில் பயிர்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
![]() |
விவசாயிகள் கூறியதாவது:
கல்லணை கால்வாயில் கொட்டப்படும் கழிவுகளால் விவசாய நிலங்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது. கீழ்குமிழி பகுதிகளில் குப்பை அதிகம் தேங்கியுள்ளது.
தற்போது தண்ணீர் குறைந்தளவில் திறக்கப்பட்டுள்ள சூழலில், தண்ணீருடன் குப்பையும், இறைச்சிக் கழிவுகளும் வருகிறது. கல்லணை கால்வாய் விஷமாகும் சூழல் உருவாகியுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.