ADDED : செப் 20, 2026 02:00 PM

மயிலாடுதுறை: மேகதாது அணை கட்டுமானத்தை தடுக்க வலியுறுத்தி, விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் பிரசார பயணம் பூம்புகாரில் இன்று (செப் 20) துவங்கியது.
மேகதாது அணை கட்டுமானத்தை தடுத்திடவும், ராசி மணலில் அணைக்கட்ட திட்டமிடவும், தமிழகத்தை வறட்சியிலிருந்து மீட்டெடுக்கவும் வலியுறுத்தி விவசாயிகள் போராடி வருகின்றனர். அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் துவங்கி டெல்டா மாவட்டங்கள் முழுவதும் 5 நாள் பிரசார பயணம் மேற்கொள்கிறார். அந்தவகையில் பிரசார பயணம் பூம்புகாரில் இன்று (செப் 20) துவங்கியது.
காரைக்கால், நாகப்பட்டினம், தஞ்சாவூர், சேலம், ஒகேனக்கல், காஞ்சிபுரம், சென்னை எழும்பூர் ,புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக சென்று வரும் செப் 24ம் தேதி திருவாரூரில் முடிவடைகிறது. பிரசார துவக்க விழாவிற்கு முன்னதாக பி.ஆர்.பாண்டியன் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் காவிரி கடலுடன் சங்கமிக்கும் இடத்தில் காவிரி தாய்க்கு சிறப்பு பூஜைகள் செய்து ஆரத்தி எடுத்து, வழிபாடு நடத்தினர்.
விழாவிற்கு வேட்டங்குடி சீனிவாசன் தலைமை வகித்தார். பிரசார பயணத்தை தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமா ராஜா துவங்கி வைத்தார். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கம் தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
